மதுரை சென்னகரம்பட்டியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் தான் சென்னகரம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்காகப் போட்டியிடுவதாகவும் தனக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 1992ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த மோதலில் அம்மாசி, வேலு ஆகிய இருவர் வெட்டிக் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.
அதேபோல் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள மேலவளவு பஞ்சாயத்துத் தேர்தலில் நடந்த மோதலில், 1997ஆம் ஆண்டு பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட முருகேசன் உள்பட ஏழு பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர் எனவும் குறிப்பிட்டார். இதுபோன்றே தனது பகுதி முழுவதும் பதட்டமானதாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், பெரும்பான்மையாக இருக்கக் கூடிய குறிப்பிட்ட பிரிவினரால் உள்ளாட்சித் தேர்தலின்போது அசம்பாவிதங்கள் ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்தார்.