மதுரை மாவட்டம், அழகர்கோவில் அருகே உள்ள செம்பியேனந்தல் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு இந்திரா அழகுமலை, பாண்டீஸ்வரி முத்துகுமார் ஆகிய இருவர் போட்டியிட்டனர். இதில், இந்திரா அழகுமலை வெற்றி பெற்று பதவியேற்ற நிலையில், அவரின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து, இந்திராவிற்கு எதிராகத் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள், இந்திராவிற்கு வாக்களிக்காதவர்களின் வீடுகளை அடித்து உடைத்து, அங்குள்ள பெண்களை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே குற்றப் பின்னணி உள்ள இளைஞர்களை கைக்குள் வைத்துக்கொண்டு, தனக்கு வாக்களிக்காதவர்களின் வீடுகளுக்குச் சென்று பெண்கள், குழந்தைகளை ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும், அடித்தும் வருவதாக இந்திரா அழகுமலை மீது புகார் எழுந்துள்ளது.
இனி, ஐந்து ஆண்டுகளுக்கு தங்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும் எனக்கூறி, இந்திரா அழகுமலைக்கு எதிராக தேர்தல் பணியாற்றியவர்கள் மீது தினசரி தாக்குதல் நடத்தப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
அடித்து உடைக்கப்பட்ட வீடு இது தொடர்பாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 5 முறை புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஆதரவாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகவும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பாக இந்தக் கும்பல் ஊரின் மத்தியப் பகுதியில், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டி கையை வெட்டியதாகக் கூறப்படுகிறது. தினசரி கையில் அரிவாள், வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தெருக்களுக்குள் வந்து மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
புகார் அளித்துள்ளதால், 'தங்களுக்கு இந்திரா அழகுமலை தரப்பால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளனர். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் ஊராட்சித் தலைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
இதையும் படிங்க:மதுரையில் ஒரே நாளில் 7 பேர் கரோனாவால் உயிரிழப்பு