மதுரை செல்லூர் ரவுண்டானாவில் ரூ.66 லட்சம் செலவில் அமையவுள்ள கபடி வீரன் சிலை கட்டுமானப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கூடைப்பந்தாட்டத்திற்கு அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரத்திலும், டென்னிஸ் விளையாட்டிற்கு நியூயார்க்கிலும், தடகளத்திற்கு இங்கிலாந்திலும், கால்பந்தாட்டத்திற்கு சேலம் - ஏற்காட்டிலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கபடி வீரர்களுக்காக மதுரை செல்லூர் ரவுண்டானாவில் சிலை அமைக்கப்பட உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொரு கட்சிக்கும் ஒருவிதமான செயல்திட்டம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் கட்சியை வளர்க்க பேசுவார்கள். அதேபோன்று பாஜக தலைவர்களும் பேசுகிறார்கள். ஜனநாயக அமைப்பில் அதில் ஒன்றும் பிழையில்லை. அதிமுக தலைமையிலான அரசு எப்போதும் எதிர்க்கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பும் அங்கீகாரமும் அளிக்கிறது. ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் அவ்வாறு நடைபெற்ற வரலாறு இல்லை" என்று தெரிவித்தார்.