மதுரை:மதுரை மாவட்ட அதிமுக சார்பில் 'மிக்ஜாம்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு 2 லாரிகள் மூலம் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அனுப்பி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, “சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு 130 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாறு காணாத மழை பெய்தது. 2015 ஆம் ஆண்டு ராணுவ தளபதி போல ஜெயலலிதா மீட்புப் பணிகளைச் செய்தார் என அனைவரும் பாராட்டினார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் புயல் நிவாரணப் பொருட்கள் மிக விரைவாக எடுத்துச் செல்லப்பட்டன.
தற்போது சென்னையில் மழை வெள்ளத்தால் பல இடங்கள் தீவு போல் காட்சி அளிக்கின்றன. பொதுமக்கள் சொல்லமுடியாத துயரத்தில் உள்ளனர். விளம்பரம் தேடியும், விடியாத அரசாக திமுக அரசு உள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கோபத்தில் உள்ளனர். திமுக மீது மிகப்பெரிய எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.