மதுரை:முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும், மதுரை மேற்குத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூர் கே. ராஜூ தனது தொகுதிக்கு உட்பட்ட பைகரா பகுதியில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வில் கலந்துகொண்டார்.
அப்போது பைகாரா மாநகராட்சிப்பள்ளியில் செய்தியாளர்களைச்சந்தித்துப்பேசினார். அப்போது, 'ராஜா என்ற பெயர் பிரச்னையான பெயர் இல்லை. என்னுடைய பெயர் கூட ராஜா தான். ஆனால், எங்களுடைய பெயர்களுக்கு களங்கம் விளைக்கும் வகையில் ஆ. ராஜா செயல்படுகிறார்.
இது போன்ற பிள்ளையை பெற்றதற்கு அவரின் தாய் தான் வருத்தப்பட வேண்டும். இவ்வளவு பிரச்னைகள் நடந்த போதும் திமுக தலைவர் பாராமுகமாக அமைதியாகவுள்ளார். ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ள சூழலில் மேலும் இதனை பாதிப்படையும் வகையில் பேசி வருகின்றனர். ஆ. ராஜா எப்போதும் வருத்தம் தரும் வார்த்தைகளை உதிர்க்கிறார். ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறப்பு குறித்து தவறாகப் பேசினார். தற்போது இப்படி பேசியுள்ளார்.
எனவே ஆ. ராஜாவுக்கு திமுக, தலைவர் வாய்ப்பூட்டு சட்டம் போட வேண்டுகிறேன். அப்போது தான் திமுக-விற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் இருக்கும். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டுவரி உயர்வு உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக ஆ. ராஜா பேச வைக்கப்படுகிறாரா என்று சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏன் முதலமைச்சர் ஆ. ராஜா விசயத்தில் வாய் மூடி மெளனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை.
இதுவே, அதிமுகவினர் இப்படி பேசியிருந்தால் கடுமையாக நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்திருக்கும். 2 ஜி அலைக்கற்றைத் தொடர்பான ஊழலில் பெரும் பகுதியை அவர் கொடுத்திருப்பார் போல... அதனால் அவரை கண்டிக்க பயம் கொள்கின்றனர் என எண்ணுகிறேன். திமுக, எப்போது ஆட்சிக்கு வந்தாலும் அடிதடியை கையில் எடுக்கும். மதுரையில்கூட ஒரு தாசில்தாரை திமுக, தொண்டரணியைச் சேர்ந்த நபர் செவ்வியைச்சேர்த்து அடித்தார்.
இதுபோன்ற பல்வேறு வன்முறைச்சம்பவங்களை திமுக-வைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்துவார்கள். எங்கள் ஆட்சியில் நாங்கள் சொல்வதை காவலர் ஏட்டுக்கூட கேட்கமாட்டார்கள். ஆனால் திமுக, ஆட்சியில் டிஎஸ்பி-யை டீ வாங்கிட்டு வரச்சொல்லி அராஜகம் செய்வார்கள். இதுபோன்ற சம்பவம் திமுக, வந்தால் எப்போதும் மாறாது. திமுக ஆட்சியில் ஸ்டாலின் ஆட்சி வந்தாலும் உதயநிதி வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும்' என்றார்.