மதுரைமேலூரைச் சேர்ந்த கலைமணியம்பலம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இயக்குநர் சந்திரா பாய் தயாரிப்பில் கரு பழனியப்பன் நடிக்கும் திரைப்படத்திற்கு கள்ளன் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆவணங்களில் 'கள்ளன்' என்றிருந்த பெயர், பின்னர் 'கள்ளர்' எனத் திருத்தி அமைக்கப்பட்டது. அந்தப் பெயரிலேயே தமிழ்நாடு அரசு சாதிச் சான்றிதழையும் வழங்கி வருகிறது. கள்ளன் எனும் பெயரில் எடுக்கப்படும் திரைப்படம், கொள்ளை கூட்டச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
இது கள்ளர் சமூகத்தின் பெயரை களங்கப்படுத்தும் வகையிலும், அந்தச் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு மன உளைச்சலையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. ஆகவே, கள்ளன் பெயரில் திரைப்படத்தை வெளியிட தடை விதித்தும் அதன் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
முன்னதாக தஞ்சை ஒரத்தநாடு அருகேயுள்ள நெடுவக்கோட்டையைச் சேர்ந்த தமிழ்நாடு கள்ளர் படை பற்று நலச்சங்கத்தின் தலைவர் வசந்த கடவராயர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் கள்ளன் திரைப்படத்திற்குத் தடைகோரி வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : சூர்யா மீது பாமகவிற்கு ஏன் இவ்வளவு வன்மம்? - என்ன நடந்தது?