மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே உள்ள முத்தப்பன்பட்டியில் 1945ஆம் ஆண்டு அக்.3ஆம் தேதி சேடப்பட்டி முத்தையா பிறந்தார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், மணிமாறன் என்ற மகனும் உள்ளனர். தற்போது அவரது மகன் மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சேடப்பட்டி முத்தையா இன்று (செப்.21) காலமானார். முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவரை கடந்த செப்.9ஆம் தேதி நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகப் பதவி வகித்தவர், சேடப்பட்டி முத்தையா. நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
மேலும் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
வயது முதிர்வு காரணமாக குடும்பத்துடன் மதுரையில் வசித்துவந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக, மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா, சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.