மதுரை மாநகரின் முக்கிய பேருந்து நிலையமாக பெரியார் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் வருகையால் பேருந்து நிலையம் அளவுக்கதிகமான கூட்டத்துடன் காணப்படும்.
இந்நிலையில் நேற்று (ஏப்.30) மாலை 4 மணியளவில் பள்ளியில் இருந்து வீட்டிற்குத் திரும்ப, பெரியார் பேருந்து நிலையத்திற்கு பள்ளி மாணவிகள் வந்துள்ளனர். அங்கிருந்த இரு தரப்பு மாணவிகளுக்கு இடையே கடந்த மூன்று நாள்களாக கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இரண்டு நாள்களாகவே மாணவிகள் பெரியார் பேருந்து நிலையத்தில் சண்டையிட்டுக் கொள்வது வாடிக்கையாக இருந்துள்ளது. அந்த தகராறு, நேற்று பெரிய சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரியார் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.