மதுரை: இந்தியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, மொத்த மக்கள் தொகையான 121 கோடியில் இரண்டு கோடியே 68 லட்சத்து 14 ஆயிரத்து 994 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்திய மக்கள் தொகையில் இது 2.21 விழுக்காடாகும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளில் 56 விழுக்காட்டினர் ஆண்களாகவும், 44 விழுக்காட்டினர் பெண்களாகவும் உள்ளனர்.
மேலும் இவர்களில் 69 விழுக்காட்டினர் ஊரகப் பகுதிகளிலும் 31 விழுக்காட்டினர் நகரப் பகுதிகளிலும் வசிக்கின்றனர். மொத்த மாற்றுத்திறனாளிகளில் ஒரு கோடியே 21 லட்சத்து 96 ஆயிரத்து 641 பேர் படிப்பறிவு உள்ளவர்களாகவும், ஒரு கோடியே 46 லட்சத்து 18 ஆயிரத்து 353 பேர் அதாவது 55 விழுக்காட்டினர் படிப்பறிவற்றவர்களாகவும் இருப்பது வேதனைக்குரியது.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 79 ஆயிரத்து 963 பேர் ஆவர். இது தமிழ்நாடு மக்கள் தொகையில் 1.64 விழுக்காடாகும். இதில் அறிவுத்திறன் குறைபாடுடையோர் மட்டும் ஆறு விழுக்காட்டினராக உள்ளனர். ஆனால் இவர்களுக்கான போதுமான எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளனவா என்றால், அவை மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இயங்குகின்றன.
மிக மிகக் குறைந்த ஊதியம்
இது குறித்து தமிழ்நாடு சிறப்புப் பள்ளிகளுக்கான கவுன்சிலின் தலைவர் ரவிக்குமார் கூறுகையில், “அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை, தன்னார்வ அமைப்புகளே தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்திவருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தனியாரும், ஓரிடத்தில் மட்டும் அரசும் நடத்துகின்றன. ஆனால் தனியாரால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு, தமிழ்நாடு அரசின் நிதி மிகக் குறைவாகவே உள்ளது.
கண்டுகொள்ளப்படாத சிறப்புப் பள்ளிகள் பிற சாதாரண குழந்தைகளைவிட, சிறப்புக் குழந்தைகளின் கற்றல்திறன் மிகக் குறைவாகவே இருக்கும். இவர்களுக்கு கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்கள் சொற்ப எண்ணிக்கையில்தான் உள்ளனர். இதற்குக் காரணம் மிக மிகக் குறைந்த ஊதிய நிர்ணயம். ஆகையால் இந்தப் பணிக்கு ஆர்வத்துடன் யாரும் முன்வருவதில்லை.
சிறப்புப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அரசு காலமுறை ஊதியம் வழங்கினால், நிறைய பேர் இத்துறையில் பணியாற்ற முன்வருவர். அதிகாரப்பூர்வ தகவலின்படி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளனர்.
தற்போது ஏழாயிரத்து 500 குழந்தைகள் மட்டுமே சிறப்புப் பள்ளிகளில் பயின்றுவருகிறார்கள். மற்றவர்களுக்கு சிறப்புக் கல்விக்கான பொருளாதார, கல்வி வாய்ப்புகள் இல்லை என்பதுதான் வேதனை. குறிப்பாக கிராமப்புறங்களில் வாழ்கின்ற அறிவுத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது” என்றார்.
பொருளாதாரச் சிக்கல்கள்
இந்தியாவிலுள்ள அறிவுத்திறன் குறைபாடுடையோர் 15 லட்சத்து ஐந்தாயிரத்து 964 பேரில், ஆண்கள் எட்டு லட்சத்து 70 ஆயிரத்து 894 பேரும், பெண்கள் ஆறு லட்சத்து 35 ஆயிரத்து 66 பேரும் உள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 847 பேரில் ஆண்கள், 55 ஆயிரத்து 854 பேரும், பெண்கள் 44 ஆயிரத்து 993 பேரும் உள்ளனர்.
இவர்களுக்குக் கல்வி வழங்கும் சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் உன்னதமானது. பிற சாதாரண குழந்தைகளுக்குக் கற்பிப்பதைக் காட்டிலும் மிகுந்த கவனமெடுத்து கற்பிக்க வேண்டும். ஈடுபாடும் உழைப்பும் மட்டுமன்றி சேவை மனப்பாங்கும் இருந்தால்தான் இப்பணியை விரும்பிச் செய்ய முடியும் என்பதுதான் யதார்த்த நிலை.
இது தொடர்பாக மதுரை சிக்கந்தர் சாவடியில் அமைந்துள்ள பெத்ஸான் சிறப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் 22 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆசிரியர் ஐசக் கூறுகையில், “இந்தக் குழந்தைகள் அனைவரும் இறைவனின் படைப்பு. அதனால் அவர்களோடு பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறேன். பொருளாதார ரீதியாக நாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம்.
இதற்காகவே சிறப்பு கல்வியை நாங்கள் கற்றிருந்தும்கூட, அதற்குரிய அங்கீகாரம் அரசிடமிருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. காலையிலிருந்து மாலை வரை இந்தக் குழந்தைகளோடு வாழ்கிறோம். சில குழந்தைகளுக்காக பள்ளி நேரம் போக கூடுதலாக அவர்களது வீட்டிற்கே சென்று பயிற்றுவிக்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது” என்றார்.
பயிற்சியால் தனித்து இயங்கும் மாணவர்கள்
பொதுவாக சிறப்புப் பள்ளிகளுக்கு வருகைதரும் ஒவ்வொரு குழந்தையும் தொடக்க காலத்தில் பெற்றோரையும், ஆசிரியர்களையும் பெரிதும் சார்ந்தே இயங்குகின்றது. ஆனால் இங்குத் தரப்படுகின்ற தொடர் பயிற்சியின் விளைவாக நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தாங்களே தனித்து இயங்குமளவிற்கு அவர்களைத் தயார்ப்படுத்திவிடுகின்றனர். ஆனால், அதற்காகச் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் தருகின்ற உழைப்பு மனிதநேயமிக்கது என்பதுதான் உண்மை.
இது குறித்து 20 ஆண்டுகள் அனுபவமுள்ள ஆசிரியை ஜோஸ்வின் கூறுகையில், “அறிவுத்திறன் குறைபாடுடைய மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பதே எனது பணி. அதுபோன்ற மாணவிகள் தொடக்கத்தில் அதிக அச்ச உணர்வோடுதான் இங்கு வருகைதருகின்றனர். நாங்கள் அளிக்கின்ற பயிற்சியின் மூலமாக மாணவிகள் மிகுந்த தன்னம்பிக்கையைப் பெறுகின்றனர்.
இதனால் பெற்றோரும் மனதளவில் மாற்றம் பெற்று, தங்கள் பெண் குழந்தைகளை விளையாட்டுகளிலும் ஈடுபடுத்த ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணமாக மாவட்ட, மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான போட்டிகளிலும்கூட பங்கேற்று சாதனை படைக்கின்றனர் என்பதற்கு எங்கள் பள்ளியே சிறந்த சான்று” என்றார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அங்கீகாரம்
சிறப்பு குழந்தைகளுக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் பிற சாதாரண போட்டியாளர்களுக்கு கிடைக்கின்ற அங்கீகாரத்தில் ஒரு விழுக்காடுகூட சிறப்புக் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.
2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 21 அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகள் அபுதாபியில் நடைபெற்ற பன்னாட்டுச் சிறப்பு ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். அதில் 19 பேர் பதக்கங்களை வென்றனர். ஆறு தங்கம், 17 வெள்ளி, ஆறு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். ஆனால் அவர்களுக்கென்று நிதி உதவியோ, பாராட்டோ, பரிசோ ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பாகக் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய உண்மை.
சிறப்புப் பள்ளிகளை மாவட்டந்தோறும் அரசே தொடங்க வேண்டும். மேலும் தற்போது தன்னார்வ அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் சிறப்புப் பள்ளிகளுக்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதுடன் அங்குப் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், சிறப்பு குழந்தை பராமரிப்பாளர்கள், பயிற்சியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவையான ஊக்கமும், ஆதரவும், அங்கீகாரமும் ஒன்றிய, மாநில அரசுகளால் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.13.35 கோடி போனஸ்