மதுரை:செக்கானூரணி அருகேயுள்ள அ.கொக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன மக்கள், அங்குள்ள கருப்பசாமி கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பதைக் கண்டித்து கடந்த ஜூலை 30 ஆம் நாள் போராட்டம் நடத்தினர்.
அதன்பின் அறநிலைத்துறை அலுவலர்கள் துணையோடு அக்கோயிலுக்குள் நுழைந்தனர். கோயிலில் பூசாரிகளாக உள்ள பட்டியல் இன குடும்பத்தினரைத் தவிர, ஏனைய பட்டியல் இன மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது.
இந்தப் பிரச்சினை அண்மையில் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, தங்களுக்கான உரிமையைக் கோரி பட்டியலினத்தவர் போராட்டம் நடத்தினர்.
நீதிமன்ற உத்தரவில் தீர்வு எட்டப்படவில்லை
இந்தப் பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவ்வூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். வட்டாட்சியர் தலையிட்டு 12 வாரங்களுக்குள் இதற்கு முடிவு எட்டப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் தீர்வு எட்டப்படவில்லை. இதற்காக அதிகார மட்டத்தில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அ.கொக்குளம் கருப்பசாமி கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது மட்டுமன்றி, இதன் பேரில் நன்செய், புன்செய் நிலங்கள் எட்டு ஏக்கரில் உள்ளன.