மதுரை:எவிடென்ஸ் அமைப்பின் (Evidence Executive Director A.Kathir) சார்பாக, 'பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பேசுகிறார்கள்' என்ற தலைப்பில் கலந்தாய்வு கூட்டம் மதுரையில் இன்று (ஏப்.29) நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய ரீதியான தீண்டாமைகளும், வன்கொடுமைகளும் நடந்து வருவதாக எழுந்த புகாரை முன்வைத்து எவிடென்ஸ் அமைப்பு மாநிலம் முழுவதும் உள்ள 19 மாவட்டங்களில் 114 தலைவர்களிடம் 40 நாட்களாக ஆய்வு நடத்தியது.
இது தொடர்பாக, இன்று மதுரை தமிழ் சங்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாதிக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பேசுகிறார்கள் என்ற தலைப்பில் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் பங்கேற்று தங்களுக்கு நடந்த கொடுமைகளை சாட்சிகளாக பதிவு செய்தனர்.
அப்போது பேசிய பிரபல மனித உரிமை ஆர்வலர் மஞ்சுளா பிரதீப், பட்டியலின பெண் ஊராட்சி மன்ற தலைவிகள் உட்பட பலரும் இங்கு அனுபவிக்கு பிரச்சனைகளை மாநில அரசு, காவல்துறை மற்றும் நம்மை சுற்றியுள்ள அமைப்புகள் தான் கேள்வி கேட்க வேண்டும் என்றார். மேலும், சமூகத்தில் மற்ற பிரச்சனைகளுக்கு நடுவே, பட்டியலின பெண்கள் கூடுதலான பிரச்சனைகளை தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் கூறினார்.