மேட்டூர் சரபங்கா திட்டம் தொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.
அதில், "காவிரி நதி நீரைப் பங்கிடுவது தொடர்பாக கர்நாடக - தமிழ்நாடு மாநிலங்களுடன் பிரச்னை எழுந்த நிலையில் அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசிடம் அனுமதி எதையும் பெறாமல் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை சார்பில் புதிய அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், டெல்டா பாசனத்திற்காக வழங்கப்படும் காவிரி நீரின், உபரியை குழாய் மூலமாக எடப்பாடிக்கு கொண்டுசெல்வது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. தமிழ்நாடு முதலமைச்சர் இது தொடர்பாக சட்டப்பேரவையில் எவ்விதமான விவாதத்தையும் நடத்தாமல் அவசரமாக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளார். தனது சொந்த தொகுதிக்கு மட்டும் நன்மையை செய்யும் வகையில், "மேட்டூர் சரபங்கா திட்டம்" என்னும் பெயரில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.