விபத்தை தவிர்த்த சமயநல்லூர் இளைஞர் - ரூ.5ஆயிரம் பரிசு கொடுத்து உற்சாகப்படுத்திய ரயில்வே மதுரை: சமயநல்லூர் - கூடல் நகர் பிரிவு ரயில் பாதை அருகே வசிப்பவர், சூர்யா. அவரது தந்தை பெயர் சுந்தர மகாலிங்கம். சூர்யா சுந்தர மகாலிங்கம் கடந்த டிசம்பர் 15அன்று காலை 8 மணியளவில் தனது வீட்டு அருகே உள்ள ரயில் பாதையில் விரிசல் ஏற்பட்டிருப்பதைக் கண்டார். அது என்னவென்று தெரியாமல், அதை தன் செல்போனில் படம் பிடித்தார்.
பின்பு இந்த செல்போன் படத்தை 500 மீட்டர் தூரத்தில் அருகில் உள்ள ரயில்வே கேட்டில் பணியாற்றும் பீட்டர் என்பவரிடம் காண்பித்தார். பீட்டர் உடனடியாக சமயநல்லூர் நிலைய அதிகாரியிடம் தெரிவித்தார். நிலைய அதிகாரி அந்த நேரத்தில் மதுரை செல்ல வேண்டிய திண்டுக்கல் - மதுரை விரைவு ரயிலை நிறுத்தி விபத்தை தவிர்த்தார்.
துரிதமாக செயல்பட்ட சமயநல்லூர் இளைஞர் சூர்யா சுந்தரமகாலிங்கத்தின் சமயோசித செயலைப் பாராட்டி கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ரூ.5000 ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார். செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற கோட்ட அதிகாரிகள் அளவிலான ரயில் பாதுகாப்புக் கூட்டத்தில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, சூர்யாவின் தந்தை சுந்தர மகாலிங்கம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை ஆகியோர் உட்பட ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:Sathuragiri Hills: சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி.. நிபந்தனைகள் என்ன?