மதுரை: மதுரையின் மிகப்பெருமை வாய்ந்த பண்பாட்டுத் திருவிழாவாகக் கருதப்படும் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து வருகின்ற மே 5ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், கள்ளழகரின் பக்தர்கள் அணியும் சல்லடம் தைக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள புதுமண்டபம் குன்னத்தூர் சத்திரத்தில் 80-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சித்திரைத் திருவிழாவின் மைய நிகழ்வாகக் கருதப்படுவது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தான்.
இதனைக் காண்பதற்கு மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புறங்களிலிருந்து மக்கள் சாரை சாரையாக வந்திருந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக அழகரின் பக்தர்கள் 'சல்லடம்' என்ற பல வண்ண ஆடைகள் உடுத்தி, தண்ணீர் பீய்ச்சியடித்து அழகரை வரவேற்று மகிழ்வது இத்திருவிழாவின் முக்கிய அம்சமாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் சல்லடம் ஆடை தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள தையற்கலைஞர்களை ஈடிவி பாரத் ஊடகத்திற்காக சந்தித்தோம். தையல்கலைஞர் கண்ணன் கூறுகையில், “புதுமண்டபத்தில் தொழில் செய்து கொண்டிருந்த நாங்கள் தற்போது புதிதாகக் கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரத்தில் எங்கள் தொழிலை மேற்கொண்டு வருகிறோம். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில்தான் சல்லடம் தயாரிக்கும் வேலைகள் இங்கே நடைபெறும். அதற்கான அனைத்து விதமான ஆடைகளும் இங்கே தயார் செய்யப்படுகின்றன. இந்த சல்லடம் உடையை அணிந்து கொண்டுதான் கள்ளழகரின் பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
இதுபோன்ற உடைகள் தமிழ்நாட்டில் வேறு எங்கும் கிடையாது. மேலும் 80-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர். சித்திரைத் திருவிழாவிற்காக புதுமண்டபத்திலிருந்து 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் உடைகள் தைக்கப்பட்டு விற்பனையாவது வழக்கம்” எனத் தெரிவித்தார்.
மற்றொரு தையல் கலைஞர் சரவணன் கூறுகையில், “அழகருக்கு விரதமிருந்து கள்ளழகரைக் காண வரும் பக்தர்களுக்கான ஆடைகள் அனைத்தும் இங்கேயே தயாராகிறது. அதுமட்டுமன்றி கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் அம்மனுக்கான ஆடைகள், துணை ஆடைகள் அனைத்தும் இங்கேயே கிடைக்கும். சலங்கை, தலைப்பின்னல் உட்பட தெய்வங்கள் தொடர்புடைய பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் புதுமண்டபம்தான் சரியான இடம்.