சேலம்:சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் முதல் தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அறையின் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, இன்று (நவ.22) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, அதிக அளவு கரும்புகை சூழ்ந்து, அருகிலுள்ள அவசர சிகிச்சை வார்டு பகுதிகளில் பரவத் தொடங்கியது. இதையடுத்து, அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசர அவசரமாக மாற்று இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செவ்வாய்பேட்டை நிலைய தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு, மருத்துவமனை வளாகத்திற்குள் சூழ்ந்திருந்த கரும்புகையை வெளியேற்றி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆய்வு செய்த 24 மணி நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த தீ விபத்து சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து குறித்து மருத்துவமனை முதல்வர் மணி கூறுகையில், “விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கான மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்த உள்நோயாளிகள் மாற்று சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.