தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோப்பூர் மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வழங்கிய அரசுக்கு நன்றி - சு வெங்கடேசன் எம்பி - தோப்பூர் மருத்துவமனை

மதுரையில் அரசு நெஞ்சக மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வழங்கியதற்காக தமிழ்நாடு அரசுக்கு சு வெங்கடேசன் எம்பி நன்றி தெரிவித்துள்ளார்.

சு வெங்கடேசன் எம்பி
சு வெங்கடேசன் எம்பி

By

Published : Jan 28, 2022, 9:24 AM IST

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ள அரசு நெஞ்சக மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வழங்கியதற்காக சு வெங்கடேசன் எம்பி தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு கரோனா சிகிச்சை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு சிடி ஸ்கேன் வசதி இல்லாதது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தோப்பூரில் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக்கு தனியாக சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் மேலாண்மை இயக்குநரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்தினேன். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் தோப்பூர் மருத்துவமனைக்கு தமிழ்நாடு மருத்துவசேவை கழகத்தினால் சிடி ஸ்கேன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதற்குண்டான சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பணிகள் சீரிய வேகத்தில் அம்மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலமாக தற்போது நிலவி வரும் கரோனா 3ஆம் அலையினை எதிர்கொள்ளவும், கரோனா நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கவும் பேருதவியாக இருக்கும். மேலும் கரோனா நோயாளிகள் மட்டுமல்லாது இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காசநோயாளிகள் மற்றும் பிற உள்நோயாளிகளுக்கும் தரமான சிகிச்சை மேற்கொள்ள உதவியாகவும் இருக்கும்.

இம்மருத்துமனையின் சுற்றுவட்டார பகுதியான திருமங்கலம், திருப்பரங்குன்றம். கள்ளிக்குடி, செக்காணூரணி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையை நாடிச் செல்லும் நிலை தவிர்க்கப்படுவதோடு அவர்களுக்கு ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும்.

இது தவிர இம்மருத்துவனைக்கென நுண்கதிர் மருத்துவர் பணியிடம் அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.அப்பணியிடத்தினை தகுதியான நுண்கதிர் மருத்துவர் கொண்டு நிரப்பும் பட்சத்தில் இம்மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள சி டி ஸ்கேன் மேலும் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதால் இப்பணியிடத்தினை உடனடியாக நிரப்ப ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் நிலையில் பறக்கும்படைகள் - மதுரை எஸ்பி பாஸ்கரன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details