மதுரை:உலகளவில் பல்வேறு சிறிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவற்றைப் பாதுகாப்பதற்கு பல்வேறு இயற்கை நல அமைப்புகளும், விலங்குகள் பாதுகாப்பு நிறுவனங்களும் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அழியும் நிலையில் உள்ள உயிரினங்களை பட்டியலிட்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
துரும்பன் பூனை இனம்: அழியும் நிலையில் உள்ள விலங்கினங்களில் துரும்பன் பூனை இனமும் (Rusty-spotted cat) ஒன்று. மிகச் சிறிய பூனை இனங்களுள் ஒன்றான துரும்பன் பூனை இனம், இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே அறிப்படும் விலங்காக உள்ளது. இந்த நிலையில் துரும்பன் வகை பூனையினம் கடந்த 2012 ஆம் ஆண்டு நேபாளத்தில் இருந்ததாக கண்டறியப்பட்டது. இந்தப் பூனை இனம் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் அருகிக் கொண்டே இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம் கூறியுள்ளன.
அருகி வரும் துரும்பன்: துரும்பன் பூனைகள் வாழக்கூடிய இலையுதிர்க்காடுகள் தற்போது அழிந்து வருவதால், இவைகளும் அழிவைச் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. உலகின் மிகச்சிறிய பூனை இனமான கரும்பாதப் பூனைகளுக்கு அடுத்தபடியாக மிக சிறிய பூனையினமாக துரும்பன் வகை பூனைகள் உள்ளன. தென்னிந்தியப் பகுதிகளில் மட்டும் கண்டறியப்பட்ட இத்துரும்பன் வகை பூனைகள் தற்போது இந்தியா முழுவதும் பரலாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.