தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கிராமப்புறங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்த வேண்டும்' - ஆர்.பி. உதயகுமார்!

மதுரை: கிராமப்புறங்களில் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

'Rural Fever Diagnosis Camp' should be held '-RP உதயகுமார்!
'Rural Fever Diagnosis Camp' should be held '-RP உதயகுமார்!

By

Published : May 21, 2021, 9:14 PM IST

மதுரை திருமங்கலம் தொகுதியில் 7ஆவது நாளாக மக்களுக்கு கபசுர குடிநீரை ‌ முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், "தென்மேற்குப் பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தேவையானதாகும்.

இந்த தென்மேற்குப் பருவமழையால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து நமக்கு உபரி நீர் கிடைக்கும். இந்த உபரி நீர் நிரம்பும் நீர்நிலைகளில் கரைகளைப் பலப்படுத்தி, ஆழப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தோப்பூரில் முதலமைச்சர் கரோனா நோயாளிகளுக்காக 500 படுக்கைகளை திறந்து வைத்துள்ளதை வரவேற்கிறேன். மேலும், இந்த மையத்தில் தொற்றுநோய் கண்டறியும் ஆய்வகம், நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை, அதி நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே சிடி ஸ்கேன் பரிசோதனை மையங்கள் இல்லை. அதேபோல் தேவையான அவசர ஊர்தி வசதியும் இல்லை. எனவே, தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுத்தால் மையம் பயனுள்ளதாக இருக்கும்.

அதேபோல் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மருந்துகள், செவிலியர், மருத்துவ உபகரணங்கள், நோயாளிகளுக்குத் தரமான உணவு, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்குத் தேவையான நிதியை முதலமைச்சர் முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முதல் அலையில் மிகப்பெரிய சவாலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்கொண்டு புதிய யுக்திகளை கையாண்டு, அதில் வெற்றி பெற்றார். அதேபோல், தற்போது இரண்டாம் அலையில் முதலமைச்சர் புதிய உத்திகளைக் கையாள வேண்டும்.

இரண்டாம் அலையில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது அலை வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே, மூன்றாவது அலை வருவதற்குள் அனைவருக்கும் தடுப்பூசியை போட வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் புதிதாக கறுப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. மத்திய அரசு அனைத்து மாநிலத்திற்கும் இதைத் தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நோயால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதலமைச்சர் இதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தற்போது கிராமப்புறங்களிலுள்ள மக்கள் கரோனா சிகிச்சைக்கு வரும் முன்பே உயிரிழந்து வருகின்றனர். நகர்ப்புறங்களில் உள்ளதைப்போல் கிராமப்புறங்களிலும் நடமாடும் காய்ச்சல் முகாம், பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். கிராமப்புற மக்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கடந்த ஆட்சியின்போது முதலமைச்சர் கோட்டையில் இடும் உத்தரவுகள், கடைக்கோடியில் இருக்கும் கிராமங்களுக்கும் பலன் போய் சேரும் வகையில் நிர்வாகம் இருந்தது. ஆகவே, தற்போதைய முதலமைச்சர் தொற்றுநோய்க்கு தகுந்தாற்போல் கூடுதல் படுக்கைகள், ஆக்ஸிஜன் மருந்து உபகரணங்கள் பற்றாக் குறையை போக்கி அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்து மக்கள் உயிரைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details