மதுரை: வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பொது மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.10க்கு 200 மில்லி லிட்டர் அளவில் பால் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மதுரை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு சார்பில் ஆவின் நிறுவனம் வாயிலாக 225க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆவின் தயாரிப்புகளான மோர், ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகிய பொருட்களையும் அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். ஆவின் பால் பாக்கெட் ஆரஞ்சு, பச்சை, நீலம் உள்ளிட்ட நிறங்களில் அந்தந்த தரத்திற்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் ஒரு லிட்டர் 60 ரூபாய்க்கும், பச்சை நிற பால் பாக்கெட் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கும், அதே போல் 250 மில்லி லிட்டர் கொண்ட பச்சை நிற பால் பாக்கெட் 12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை ஆவின் நிறுவனத்தின் பொது மேலாளர் சிவகாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "மதுரை ஆவின் நிறுவனத்தின் மூலம் பொது மக்கள் பயன்பெறும் வகையில் நவம்பர் 1 முதல் 10 ரூபாய்க்கு 200 மில்லி லிட்டர் பால் மற்றும் 145 மில்லி லிட்டர் தயிர் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும், வியாபாரிகள், ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பால் டீ மேட் 500 மில்லி லிட்டர் பாக்கெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதனை பொது மக்கள் மற்றும் அனைத்து வியாபார பெறுமக்களும் வாங்கி பயன் பெற வேண்டும். மேலும், வருகின்ற பண்டிகை காலங்களில் ஆவின் நெய், பால்கோவா, மைசூர்பாக், மில்க் கேக், காஜு கட்லி, பிஸ்தா ரோல், நெய் அல்வா, நெய் லட்டு, மோதி பாக், மிக்சர் ஆகிய இனிப்பு கார வகைகள் விற்பனை செய்யப்படும்" என்றும் மேலாளர் சிவகாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:அதிமுக - பாஜக பிளவு முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை.. ஈடிவி பாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பிரத்யேக பேட்டி!