மதுரை:மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தானம் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கடந்த 2021 மற்றும் 2023 மே மாதம் வரை பதிவான எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு வழக்குகளின் எண்ணிக்கை விவரங்கள், வழக்கின் தன்மை ஆகியவை கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்தப் பதிலில், “பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் சாதிய ரீதியாக இழிவாக பேசப்படுவது, தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவது, படுகொலைகள், பாலியல் வன்புணர்ச்சி என பாதிக்கப்படும்போது, சட்டரீதியாக அவர்களுக்குத் தீர்வு ஏற்படுத்தி மறுவாழ்வு கிடைக்கப் பெற செய்ய வேண்டும் என்பதற்காக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டம் 2015 (எஸ்.சி/ எஸ்.டி திருத்தச் சட்டம்) கொண்டு வரப்பட்டது.
இந்த திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், கடந்த 2021 மற்றும் 2023 மே மாதம் வரை மட்டும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 576 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் மதுரை மாவட்டத்தில்தான் அதிகளவாக 210 வழக்குகள் பதிவாகி உள்ளது.
இதில் 8 கொலை வழக்குகளும், 3 போக்சோ மற்றும் ஒரு கொத்தடிமை தொழிலாளர் முறை வழக்கும் பதிவாகி உள்ளது. கொலை வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் நிவாரணத் தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, மாத ஓய்வூதியம், நிலம் வழங்குதல் போன்ற மறுவாழ்வு நிவாரணங்கள் முழுமையாக கிடைக்கப் பெறாத சூழல் உள்ளது.