மதுரை:தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி முதல் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசுத் தரப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான தகவல்களை மக்கள் அறிந்து கொள்வதற்கு உருவாக்கப்பட்டதாகும். இதன் மூலம் தங்களது அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கும் அதனைக் குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பு உருவாகியது.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில முதன்மை தகவல் ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் 10 பேரை அந்தந்த மாநில ஆளுநரே நியமனம் செய்கிறார். ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்நிலையில் தமிழக தகவல் முதன்மை ஆணையர் உள்ளிட்ட துணை ஆணையர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அவர்களைத் தேர்வு செய்யும் தேடுதல் குழு ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் நியமனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆர்டிஐ ஆர்வலர்கள் தங்களது எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளனர்.
சிறந்த ஆணையர்கள் தேவை:இந்தியன் குரல் என்ற அமைப்பின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளராகவும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆர்டிஐ ஆர்வலராகவும் இயங்கி வரும் ராமகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியைக் கொண்டு வர முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். தலைமைத் தகவல் ஆணையர் உட்பட 5 தகவல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. அதன் விண்ணப்பதாரர்களில் நானும் ஒருவன். ஆனால், இதுவரை நேர்காணலுக்கு அழைக்கப்படவேயில்லை. என்னுடைய விண்ணப்பம் எந்தக் காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால்தான் அடுத்த முறை அதனை நான் சரி செய்து கொள்ள முடியும்.
தமிழக முதல்வர் சிறப்புடன் இயங்குவதற்கு என்னைப் போன்ற ஆர்டிஐ ஆர்வலர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். ஆகையால் தமிழ்நாடு தகவல் ஆணையம் சுதந்திரமாக இயங்க அதிகாரம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டுமானால் தகவல் ஆணையத்தை சீரமைப்பதுதான் ஒரே வழி. காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்போது லட்சக்கணக்கில் குவிந்துள்ள மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்க சிறந்த ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும்” என்கிறார்.
வெளியே கசியும் தகவல்:இந்தியன் குரல் அமைப்பின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்டிஐ ஆர்வலராக இயங்கி வருபவருமான என்.ஜி.மோகன் கூறுகையில், “தகவல் ஆணையர் விசாரணையின் வழங்கும் தீர்ப்பு பெரும்பாலும் உத்தரவாக தட்டச்சு செய்யப்பட்டு வரும்போது இருப்பதில்லை. இதுபோன்ற மோசடி தகவல் ஆணையத்தில் நெடுநாட்களாகவே நடைபெற்று வருகிறது. இணையத்தில் உடனடியாக தரவேற்றம் செய்வதுமில்லை. ஒவ்வொரு முறையும் விசாரணையின்போது எங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து சென்னைக்கு வருகிறோம். ஆனால் எங்கள் முன்னர் வழங்கப்பட்ட உத்தரவு, வீட்டுக்கு வரும்போது இருக்காது. அபராதத்தொகை ரூ.25 ஆயிரம் எனக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு உத்தரவு, எழுத்தில் வரும்போது அவ்வாறு இல்லை. இது எனக்கு நடந்த உண்மை நிகழ்வுகளில் ஒன்று.