மதுரை:ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) சங்கம் சார்பாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்ளிட்ட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வரம்பிற்கு உட்பட்ட 20 இடங்களில் வருகிற 22ஆம் தேதி விஜயதசமி நாளன்று ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கக் கோரி ஆர்எஸ்எஸ் மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில், “இந்திய சுதந்திரம் 75வது ஆண்டு கொண்டாடும் விதமாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விஜயதசமி (22-10-2023) நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையான காக்கி டவுசர், வெள்ளை சட்டை , தொப்பி, பெல்ட், பிளாக் ஷூ அணிந்து இசை வாத்தியம் முழங்க நகர் முழுவதும் மாலை 4 மணிக்கு பேரணி ஆரம்பித்து, நகரின் பல்வேறு பகுதிகளை பேரணி ஊர்வலமாக சுற்றி வந்து, இறுதியாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என அனுமதி கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தும், இதுவரை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதேபோல் கடந்த வருடம் பேரணி நடத்த அனுமதி வழங்கக் கோரி மனு அளித்தோம். காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், காவல் துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. பின்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெற்று, தமிழக முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வல பேரணி நடத்தினோம். எனவே இந்த வருடம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “ விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் காக்கி டவுசர், வெள்ளை சட்டை மற்றும் தொப்பி அணிந்து கையில் பாரத மாதா கொடியுடன் ஊர்வலம் நடத்த இருக்கிறோம்.
இந்தியாவில் உள்ள அனைவரையும் சகோதரத்துவமாகத்தான் பார்க்கப்படுகிறோம். மேலும் ஊர்வலத்தின்போது பட்டாசு வெடிப்பதோ, எவ்வித அசம்பாவிதம் ஏற்படாது. ஊர்வலத்தின்போது ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. இந்தியாவை பாரதம் என்று நாங்கள் சொல்கிறோமே தவிர, அகண்ட பாரதம் என்று எங்கும் பேசப்படவில்லை. இந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அமைதியான முறையில் நடத்தப்படும்” என தெரிவித்தார்.