மதுரை:பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் தன் மீதான கொலை வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்த வழக்கில், அவர் மீது பதியப்பட்டுள்ள கொலை வழக்கின் நிலை அறிக்கையை விருதுநகர், அருப்புக்கோட்டை உதவி காவல் கண்காணிப்பாளர் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
வரிச்சியூர் செல்வம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். மதுரை கருப்பாயூரணியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலையில் செந்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில், வரிச்சியூர் செல்வத்தின் சகோதரர் உள்பட 3 பேர் கைதான நிலையில், செந்தில்குமார் கைதாகாமல் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதற்கிடையில், செந்தில்குமார் காணாமல் போனதாக அவரது மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், கணவர் செந்திலை கண்டுபிடித்து தருமாறு மதுரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். இது வழக்கை மதுரை ஐஜி அஸ்ராகார்க் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தனிப்படை காவல்துறை நடத்திய விசாரணையில், காணாமல் போன செந்தில் கடந்த 2021 ஜனவரியில் சென்னையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் தாமிரபரணி ஆற்றில் வீசப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.