சாலை விரிவாக்கப் பணி - பிள்ளையார் கோயிலை அகற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு - பழனி ரயில்வே பீடர் ரோடு
மதுரை : பழனி ரயில்வே பீட்டர் சாலை விரிவாக்கப் பணிக்காக பிள்ளையார் கோயிலை அகற்றக் கோரிய வழக்கை, தொடர்புடைய வழக்குகளுடன் பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
![சாலை விரிவாக்கப் பணி - பிள்ளையார் கோயிலை அகற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு மதுரை உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:50:45:1598959245-tn-mdu-hc-01-palani-rly-feeder-road-script-7208110-01092020163605-0109f-1598958365-368.jpg)
திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த துளசிதுறை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “பழனி நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
அந்த வகையில், சாலையில் உள்ள பிள்ளையார் கோயிலை அகற்றக்கோரி சம்மன் அனுப்பப்பட்டும் கோயில் நிர்வாகத்தினர் பதிலளிக்காத நிலையில், பிள்ளையார் கோயிலை அகற்ற அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பாக அலுவலர்களிடம் கால அவகாசம் கோரப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே பழனி ரயில்வே பீட்டர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பான பிற வழக்குகளுடன் மனுவைப் பட்டியலிட உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டனர்.