தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்வளம் காக்க... நதிக்கு ஒரு நாடாளுமன்றம்... சமூக சேவகர்களின் பாராட்டிற்குரிய முயற்சி! - தமிழ்நாடு ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் மதுரை

மதுரை: தமிழ்நாட்டிலுள்ள ஆற்று நீர் வளங்களைக் காப்பாற்றுவதற்காக, ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு நாடாளுமன்றம் அமைத்து சமூக ஆர்வலர்கள் அதிரடி காட்டியுள்ளனர்.

தமிழ்நாடு ஆறுகள் வளம் மீட்பு இயக்கம்
தமிழ்நாடு ஆறுகள் வளம் மீட்பு இயக்கம்

By

Published : Dec 1, 2019, 5:41 PM IST

தமிழ்நாட்டிலுள்ள ஆறுகளையும் அதன் வளத்தையும் மீட்பதற்காக தமிழ்நாடு ஆறுகள் வளம் மீட்பு இயக்கம் சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர்கள், வேளாண் அலுவலர்கள், நீராதார வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாட்டிலுள்ள உள்ள ஆறுகளின் வளங்களை மீட்டெடுக்கும் பொருட்டு ஒவ்வொரு நதிக்கும் நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. அந்தந்த நதிகளைச் சார்ந்த தன்னார்வலர்கள், இதில் அங்கம் வகிப்பர் என்றும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்பட்டன.

நதிக்கும் நாடாளுமன்றக் குழு அமைப்பு

இது குறித்து வைகை நதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ராஜன் கூறுகையில், 'தேனி மாவட்டம் தொடங்கி ராமநாதபுரம் வரை 258கி.மீ. தூரத்தில் வைகை ஆறு ஓடுகிறது. இந்த வைகை ஆற்றால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.

வைகை நதி நாடாளுமன்றக் குழுவைப் பொறுத்தவரை இரண்டு பிரிவாக இயங்கும். மக்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவற்கு ஓரு குழுவும், அரசு அலுவலர்களைச் சந்தித்து அவர்கள் மூலமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மற்றொரு குழுவும், இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.

அதேபோன்று வைப்பாறுக்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் கூறுகையில், 'தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பெயரளவிற்காவது ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், வைப்பாறைப் பொறுத்தவரை, அது தடம் தெரியாமல் அழிந்துவிட்டது. இதில் முதற்கட்டமாக, இந்த ஆற்றினால் பயன்பெறும் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

நதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர்கள்

கேரள மாநிலம் பம்பையிலிருந்து வைப்பாற்றின் வழித்தடங்களைக் கண்டறியும் பணியை வல்லுநர்களோடு இணைந்து மேற்கொள்வோம். இதன்மூலம் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். நான்கு மாவட்டங்கள் பயனடையும். பம்பை நதியிலிருந்து வீணாகிச் செல்லும் 25 டிஎம்சி தண்ணீரில் 15 டிஎம்சி நமக்குக் கிடைப்பதால் கேரள மாநிலத்திற்கு 500 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும்' என்று தெரிவித்தார்.

காவிரி ஆற்றுக்கான நாடாளுமன்றத் தலைவர் சத்தியநாராயணன் கூறுகையில், 'தெலங்கானா மாநிலத்தில் திறம்பட மேற்கொள்ளப்படுகின்ற நீர் மேலாண்மையைக் கண்டறிந்த பிறகுதான் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சூழலை உருவாக்கமுடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குப் பிறந்தது.

காவிரி பாசனப் பகுதி மேம்பாட்டிற்காக அமைக்கப்படும் இந்த நாடாளுமன்றக் குழு, நீர்ப் பகிர்வில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையே உள்ள பிரச்னைகள் சுமூகமாகத் தீர்க்கப்படுவதுடன், நதிகள் இணைப்பிற்கான பணிகளை நாங்கள் முன்னெடுப்போம்' என்றார்.

தாமிரபரணி ஆற்றுக்கான நாடாளுமன்றத்தின் பிரதிநிதி முத்துசாமி கூறுகையில், 'கடந்த பத்தாண்டுகளாக தாமிரபரணி ஆற்றை மிகச்சிறப்பான முறையில் பராமரித்து வருகிறோம். நெல்லை ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தேவையான ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்குகின்றனர். தாமிரபரணி ஆறு பாபநாசதத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் வரை பாய்கிறது. இதன் இரண்டு கரைகளிலும் உள்ள நீர்நிலைகளையும் நெல்லை மாநகராட்சியின் ஒத்துழைப்புடன் பராமரிப்புச் செய்து வருகிறோம்' என்றார்

நதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர்கள்

தமிழ்நாட்டின் ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் குருசாமி கூறுகையில், 'இந்தியாவைப் பொறுத்தவரை நதிநீர் மேலாண்மை என்பது கடந்த 50ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இந்நிலையில் நதிகளை மீட்பதும், நிலத்தடி நீரை செறிவூட்டுவதும் தலையாய பணியாக மாறிவிட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மழை மறைவுப் பிரதேசமாகவே இருந்து வருகிறது. இங்கே ஓடுகின்ற ஆறுகள் அனைத்தும் வேறு மாநிலங்களில் தோன்றி, அரசியல்ரீதியான காரணங்களால் கீழமைப் பாசன உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

நதிநீர்ப் பங்கீட்டில் பாதிப்பிற்குள்ளான இந்திய மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்ற காரணத்தால், இங்கு நதிநீர் மேலாண்மை குறித்தும் அதன் உரிமைகள் குறித்தும் ஆக்கப்பூர்வ சிந்தனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் மனிதர் ராஜேந்திரசிங் வெற்றிகரமாக செயல்படுத்திய நதிநீர் நாடாளுமன்ற முறைப்படி தமிழ்நாட்டிலும் அதனைச் செயல்படுத்த முனைந்துள்ளோம்.

தமிழ்நாடு ஆறுகள் வளம் மீட்பு இயக்கம்

தமிழ்நாட்டிலுள்ள 17 நதிநீர் படுகைகளுக்கும் இதனைக் கொண்டு வரவிருக்கிறோம். இதுவரை தாமிரபரணி, வைப்பாறு, வைகை, காவிரி, பெண்ணாறு மற்றும் பாலாறு ஆகியவற்றுக்கு நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளன. சென்னை நதிநீர் படுகையில் வருகின்ற கொசஸ்தலையாறு, அடையாறு மற்றும் கூவம் ஆகியவற்றுக்கான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

இதையும் படிங்க: பசுமையை காக்க 2,250 மரக்கன்றுகள் நட்டு அசத்திய கல்லூரி மாணவர்கள்
!

ABOUT THE AUTHOR

...view details