மருத்துவமனையில் திரளும் நோயாளிகளின் உறவினர்கள் - கரோனா தொற்று பரவும் அபாயம்! - கரோனா தொற்று
மதுரை: கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் காண உறவினர்கள் திரளுவதால், தொற்று பெருமளவு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று மிகத் தீவிரமாக பரவி வருவதையடுத்து, மதுரையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
நாளொன்றுக்கு சராசரியாக 100 பேர் கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உயர் சிகிச்சை பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திலுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மருத்துவமனை முன்பாகத் திரள்வதால், நோய் மேலும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இவர்களைக் கலைந்து போகச் சொல்லி காவலர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியைக் கடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் பீதியுடனேயே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறை, சுகாதாரத்துறை, மருத்துவமனை நிர்வாகம், மதுரை மாவட்ட நிர்வாகம் ஆகியவை ஒருங்கிணைந்து இதற்கொரு முடிவைக் காண வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.