சிபி ராதாகிருஷ்ணன் பேட்டி மதுரை:கன்னியாகுமரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி அறிஞர் அண்ணாவின் வழியை பின்பற்றுகிறார் என நினைக்கிறேன். சென்னை ராஜதானி -சென்னை மாகாணம் என்றும் இருந்ததை தமிழ்நாடு என மாற்றினார். அவ்வாறு மாற்றியது சரி என்றால் பாரத் என்ற பெயர் மாற்றமும் சரிதான்.
தமிழக அரசு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முதலமைச்சருக்கு மரியாதை கொடுக்க வேண்டியது எவ்வளவு முக்கியமான மரபோ, அதேபோல் ஆளுநருக்கு மரியாதை கொடுக்க வேண்டியதும் மரபாகும். தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் பலர் அந்த மரபை மீறுகிறார்கள்.
சனாதனம் என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது போல் கூறுகிறார்கள். சனாதனம் என்பது இந்து மதத்தின் ஒரு அங்கம் தான். இந்து மதத்தில் காலத்தின் அடிப்படையில் தோன்றிய ஜாதிகள் பல்வேறு சமூக வெறுப்புகளை உருவாக்கியது என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஆனாலும் இந்து மதம் அதனை போதிக்கவில்லை, மாறாக எல்லோரையும் சமமாக தான் நடத்த வேண்டும் எனக் கூறியது.
ராமாயணத்தை எழுதியது மகாபாரதத்தை எழுதியதும் மேல் ஜாதியை சார்ந்தவர்கள் அல்ல சாதாரணமான குடிமகன்கள் தான். ஜாதியின் காரணமாக ஒருவருக்கு உயர்வு, தாழ்வு கிடையாது. குலத்தின் காரணமாகத்தான் உயர்வு, தாழ்வு உண்டு என்று நமக்கு இதிகாசங்கள் போதிக்கின்றன.
மீண்டும் அத்தகைய சூழல் அமைய அனைத்து சமூகமும் ஒத்துழைக்க வேண்டும். ஜி20 மாநாட்டில் எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கவில்லை குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு அரசியல் தலைவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். ராகுல் காந்திக்கு பதில் சொல்வது ஆளுநர் வேலையல்ல. பின்பு கவர்னர் அரசியல் பேசுகிறார் என கூறுவார்கள். இதை அரசியல் தலைவர்களிடத்தில் தான் கேட்க வேண்டும்.
ஒரு ஆளுநரை அமைச்சர்கள் வாடா, போடா என்று சொல்வது சரி என்றால், உதயநிதியின் தலைக்கு சாமியார் விலை வைத்ததும் சரிதான். அதனால்தான் யாரும் எப்போதும் மரபை மீறக் கூடாது, நாம் பிறரை மதிக்க கற்றுக் கொண்டால் எல்லோரும் நம்மையும் மதிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தல் குறித்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்தியா என்ற எழுத்துக்கு முன்னால் இரண்டு எழுத்துக்களை சேர்த்துக் கொள்ளுங்கள் அதை நான் கவர்னராக இருந்து சொல்லக்கூடாது" என சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தர்.
இதையும் படிங்க:சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறத்துக்கே இந்த நிலையா..? - ஆதங்கத்தில் கிராம மக்கள்!