மதுரை திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகே ஆட்டோவில் வந்து இறங்கினார், ஓய்வுபெற்ற டிஎஸ்பி மாலதி. அவரைப் பார்த்ததும் சோர்ந்து கிடந்த குரங்குகள் உற்சாகமாய் ஆட்டோவைத் தேடி வந்தன. பசி மயக்கத்தில் கிடந்த குரங்குகள், தனது பெற்ற தாயைப் பார்த்ததுபோல மகிழ்ச்சியில் ஓடி வந்து அவரிடம் தஞ்சம் அடைந்துவிட்டன. இதில், ஒரு சில குரங்குகள் அத்துமீறி கூடைகளிலிருந்த பழங்களையும், கடலைகளையும், முட்டைகளையும் எடுத்துச் செல்கின்றன.
இதனைப் பார்த்த மாலதி மிகப் பரிவோடும், கோபப்படாமலும் தன் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் 'சரிடா... சரிடா... எல்லாம் உங்களுக்குத்தான்டா...' என்று அன்பொழுகப் பேசி மகிழ்கிறார். இந்தக் காட்சிகள் பார்ப்பவரை நெகிழ்ச்சியூட்டுகிறது. அங்கு சுற்றித் திரியும் குரங்குகளின் பசியைப் போக்கிய மன திருப்தியோடு, திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயிலுக்கு தனது பயணத்தைத் தொடர்ந்தார். அவரை பின்தொடர்ந்தே ஈடிவி பாரத் தமிழ் ஊடகக்குழுவும் சென்றது.
கல்வெட்டு குகை கோயிலுக்குள் நுழைந்ததும், ஆட்டோவை விட்டு இறங்கி குரங்குகளை தான் பெற்ற பிள்ளைகளை அழைப்பதுபோல், அழகு தமிழில் 'வா...கண்ணா...வா' என்று அழைக்கிறார். அவர் அழைத்த மறுகணம் குரங்கு குட்டிகள் ஒவ்வொன்றும் மாலதி இருக்கும் இடத்தை நோக்கி ஓடி வருகின்றன. தன் கையில் வைத்திருக்கும் வாழைப்பழத்தை குரங்குகளிடம் பகிர்ந்தளித்தார், மாலதி. அதில் ஒரு குரங்கு மட்டும் அவரிடம் எனக்கு இன்னொன்று வேண்டும் என்ற தொனியில் கையை அசைக்கிறது. அவரிடம் இருக்கும் வாழைப்பழத்தை பறிக்கவும் முயல்கிறது. இதற்கும் சிறிதளவும் கோபப்படாத அந்த மாலதி அம்மா சிரித்தபடியே, 'இருடா தர்றேன். மற்றவங்களுக்கும் கொடுக்கணும்ல. உனக்கு வயிறு நிறைஞ்சா போதுமா?' என்று விளையாட்டாக கேட்கிறார்.
அவர் பேசுவது புரிந்தாற்போல், அந்த குரங்கு அமைதியாக சாப்பிட்டது. பெற்ற பிள்ளைகளையே அவதூறாக அழைக்கும் இந்தக் காலத்தில் குரங்குகளை, பெற்ற பிள்ளைகளைப் போல் பாசமாய், பரிவுகாட்டி, அன்போடு பிள்ளைகள் என்று மாலதி அழைப்பது அவர் குரங்குகள் மீது வைத்திருக்கும் பாசம் அளப்பறியது என்பதை பிறருக்கு புரிய வைக்கிறது. குழந்தைகளைப் போல் அவர் குரங்குகளை நேசிக்கிறார்.
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், '2010ஆம் ஆண்டு நான் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றேன். 2015ஆம் ஆண்டிலிருந்து குரங்குகளுக்கு பழங்கள் தருகின்ற சேவையில் இறங்கினேன். திருப்பரங்குன்றம் பகுதிகளில் நிறைய குரங்குகள் உள்ளன. 'குழந்தைகள்' என்றுதான் அவற்றை நான் சொல்வேன். இங்கு மரங்கள் அதிகம் இருக்கிறது. ஆனால், இங்கு சுற்றித் திரியும் பிள்ளைகளின் பசியைத் தணிக்கக்கூடிய அளவிலான பழ மரங்கள் எதுவும் இல்லை. அதனால் தான் அவை பசியோடு இருப்பதாகவே நான் கருதுகிறேன். எனது ஓய்வுக்குப் பிறகு இந்தப் பிள்ளைகளுக்கு நாள்தோறும் பழங்கள், வேர்க்கடலை, முட்டை என பாசத்தோடு வழங்கி வருகிறேன்.
ஆனால், என்ன... முன்ன மாதிரி தினமும் வந்து போக முடியலை. உடல் நிலையும் ஒத்துழைக்க மாட்டேங்குது. அதனால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதையெல்லாம் வழங்கி வருகிறேன். திருப்பரங்குன்றத்தில் சரவணப் பொய்கை, குகைக்கோயில், மயில் தோப்பு, கோட்டைத் தெரு மற்றும் சஷ்டி மண்டபம் ஆகிய பகுதிகளில் குரங்குள் நிறைய உள்ளன. அங்கெல்லாம் தேடிச் சென்று உணவு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளேன் என்றும் நெகிழ்ச்சியாக கூறினார்.