மதுரை:மத்திய அரசின் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் வேளாண் உணவுத் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "சில்லறை வியாபார நிறுவனங்கள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும். ஏறக்குறைய 120 லட்சம் சில்லறை பலசரக்கு வியாபார நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 60 சதவிகிதத்திற்கும் மேல் அரசிடம் எந்த உதவியும் பெறாத நிறுவனங்கள். கரோனா தொற்றுக்குப் பிறகு தற்பொழுது மாதம் ரூ.1.5 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வருவாய் கிடைப்பதாலும், நேரடி வரி வருவாய் பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டதை விடக் கூடுதலாக வசூலாகும் என்பதாலும் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீண்டு விட்டதாக முடிவுக்கு வரக்கூடாது.
பெரிய நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைந்து வருகின்றன. ஆனால் சிறிய சில்லறை வியாபார நிறுவனங்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் மூடப்பட்டு வருகின்றன. அவற்றின் வரி வருவாய் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட சட்டம் போன்று சில்லறை வியாபாரிகளுக்கென எந்தப் பாதுகாப்புச் சட்டமும் இயற்றப்படவில்லை.