3 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த கர்ப்பிணி மதுரை: வெள்ள நீர் சூழ்ந்த ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்டோர் மீட்கப்பட்டு வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவரை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அதுகுறித்து கர்ப்பிணி பெண் அனுசுயாவின் தாயார் சேதுலட்சுமி கூறுகையில், "இந்த மாசம் எனது மகளுக்கு பேறுகாலம். அவ்வப்போது வயிறு வலிக்குது என்று சொல்லிக் கொண்டிருந்தார். எப்படியாவது வெளியே அழைத்துச் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தபோது, வீட்டை வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆனாலும் கடும் முயற்சி செய்து இடுப்பளவு தண்ணீரில் வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்துவிட்டேன்.
ஆம்புலன்ஸ் ஒன்றை அழைத்துக் கொண்டு ஸ்ரீவைகுண்டம் வரை வந்துவிட்டோம். அங்கும் கடுமையான வெள்ளம். ஆகையால் அரசு மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை. என்னுடைய அண்ணன் மகள் அங்குள்ள ஒரு குடியிருப்பில் இருந்ததால், நாங்கள் அங்கே சென்றோம். அங்கும் 2 தளங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. கடைசியாக மொட்டை மாடியாக இருந்த 3-ஆவது தளத்தில்தான் குடையைப் பிடித்துக் கொண்டு மழையில் நனையாமல் இருந்தோம்.
குடிதண்ணீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் கடந்த 3 நாட்கள் அங்குதான் இருந்தோம். உணவு, பால் எதுவும் கிடைக்கவில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தோம். அப்போதுதான் மீட்புப் பணிக்காக வந்த ஹெலிகாப்டரில் உள்ள நபர்கள் பார்க்கும் வகையில் மருத்துவனைக்குச் செல்ல உதவி வேண்டும் என அட்டையில் எழுதி காண்பித்தோம்.
அதனைத் தொடர்ந்து வந்த மீட்புப்படையினர் மொட்டை மாடியில் இறங்கி என்னுடைய பெண்ணை முதலிலும், பிறகு ஒவ்வொருவராக எங்களையும் அழைத்துச் சென்றனர். திருநெல்வேலி செல்கிறீர்களா என்று மீட்க வந்த ராணுவத்தினரிடம் கேட்டபோது, இல்லை மதுரைக்குச் செல்கிறது என்றார்கள். மதுரை வந்து இறங்கும்போது மூன்று மாவட்ட ஆட்சியர்கள் அங்கே இருந்தனர். மேயர், தாசில்தார் ஆகியோரும் உடன் இருந்தனர்.
மதுரையில் இறங்கியதும் அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். முதன் முதலாக ஹெலிகாப்டரில் ஏறும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால், நம் உயிரைக் காப்பாற்ற வந்திருக்கிறார்கள் என்பதால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அதில் ஏறி வந்துவிட்டோம். இப்போது எனது பெண் நன்றாக இருக்கிறார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்; 1.3 டன் உணவு பொருட்களுடன் விரைந்த ஹெலிகாப்டர்