மதுரையைச் சேர்ந்த முகமது ஆசிப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி கிரேட்- 2 காவலர்க்கான (AR, Jail Warder, TSP, Firemen) எட்டாயிரத்து 888 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதில் 62 பணியிடங்கள் (BCM) இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடாகும். இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி. இதனைத் தொடர்ந்து, இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்றது. தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றோம். இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, இறுதி முடிவு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில், (Backward Class) இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீட்டில் 10 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. கிரேட் 2 காவலருக்கான (AR, Jail Warder, TSP, Firemen) எட்டாயிரத்து 888 பணியிடங்களில் எட்டாயிரத்து 836 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 52 இடங்கள் நிரப்பப்படவில்லை. எனவே இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள 52 பணியிடங்களை நிரப்புவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இதுவரை தேர்வு செய்யப்பட்டுள்ள எட்டாயிரத்து 836 பேருக்கு பணியிட சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கு குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.