மதுரை: தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் அமைக்க வலியுறுத்தி மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் இருவரும் ஒன்றிய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவை இன்று (ஜூன்.22) சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசால் கடந்த 1998ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி ’தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (NIPER)’ ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகும்.
மருந்துசார் அறிவியலில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக ஒரு சிறப்பு மையத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மருந்துசார் அறிவியலில் முதல் தேசிய அளவிலான கழகமாக உருவாக்கப்பட்டது தான் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (NIPPER). இந்திய அரசு, தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இது இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துசார் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இது இந்தியத் தொழில் நுட்பக் கழகத்திற்கு சமமான அந்தஸ்தை கொண்டதாகும். மருந்துசார் அறிவியலில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர அடையாளத்துடன் உருவாக்கும் ஒரு பார்வையுடனும், மருந்துசார் தொழில் வளர்ச்சிக்காகவும், இந்திய மக்களின் நலனுக்காகவும் ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை உருவாக்குவது கட்டாயமாகும்.
தற்போது நாடு முழுவதும் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் உள்ளன. முதல் கழகம் 1998ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு மற்ற ஆறு கழகங்கள் 2007 - 08 காலக்கட்டத்தில் அகமதாபாத், கௌஹாத்தி, ஹைதராபாத், ஹாஜிபூர் (பீகார்), கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டன.