தமிழ்நாடு உயர் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில அமைப்பாளர் முரளி, துணைவேந்தர் நியமனங்களில் நடக்கும் ஊழல் குறித்து விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:
1. கரோனா தடுப்பூசியை கல்லூரி மாணவர்களுக்கு கால நிர்ணயம் செய்து விரைவாக அந்தந்தக் கல்லூரிகளிலேயே தடுப்பூசி மையம் அமைத்து செலுத்த வேண்டும்.
2. ஒவ்வொரு கல்லூரியும் அதற்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு கரோனா பாதுகாப்பு, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுக்க வேண்டுகிறோம்.
3. கரோனா காலத்தில் ஒவ்வொரு கல்லூரியும் தங்கள் விருப்பத்திற்கேற்ற முறையில் தேர்வுகளை நடத்தி வருகின்றன. இதைத் தவிர்த்து தரமான ஒரே மாதிரியான தேர்வு முறையை அரசு முன் வைக்கக் கோருகின்றோம்.
4. தமிழ்நாட்டில் உதவிப் பேராசிரியர்கள், துணைவேந்தர் பொறுப்புகளுக்கான காலிப் பணியிடங்கள் கல்வியக நிர்வாகத்தினராலும், அரசைச் சார்ந்தவர்களாலும் பல லட்சம் இலஞ்சம் பெற்றே நிரப்பப்பட்டுள்ளன. இது குறித்து ஒரு உயர்மட்ட விசாரணைக்குழு அமைத்து இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.
5. சுயநிதிக் கல்லூரிகளிலும் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்ற கட்டளையிட வேண்டுகின்றோம்.
6. கெளரவ விரிவுரையாளர்களாகத் தகுதியற்ற பலர் நியமிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கைத் தேவை.
7. கல்லூரி, பல்கலை ஆசிரியர் அலுவலர் நியமனங்களில் இடைத்தரகர்கள் எண்ணற்றவர்கள் லஞ்சம் பெற்று விதி மீறல்கள் செய்து வருகின்றனர். இடைத் தரகர்களாக சில ஆசிரியர்கள் இருப்பது வருந்தத்தக்க விஷயம். அவர்கள் மேலும் பதவி உயர்வும் பெறுவதற்கு முயல்கின்றனர். இதைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகின்றோம்.
8. தற்போது பல்கலைகளில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையில் சமூக நீதியை மறுக்கும் நிலை உள்ளது. துறைவாரியாக ரோஸ்டர் பின்பற்றப்படுகின்றது. இதனால் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவரின் வாய்ப்புகள் வெகுவாக குறைகின்றன. எனவே, தற்போது பின்பற்றப்பட்டு வரும் துறை வாரியான இட ஒதுக்கீட்டு முறையை கைவிட்டு, பல்கலைக் கழகத்திற்கு முழுவதுமான ரோஸ்டர் (SINGLE UNIT) முறை பின்பற்ற கோருகின்றோம்.
9. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் தங்களின் விருப்பப்படி ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமிக்கும் போக்கு உள்ளது. அது தடுக்கப்பட்டு, நியமன ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்குப் பணி மூப்பின் அடிப்படையில் பணி வழங்குவதை உறுதி செய்ய வேண்டுகின்றோம்.
10. பல சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்களிடம் முழு கல்விக் கட்டணத்தைப் பெற்ற பின்னும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமலும், சிலர் அரை குறை ஊதியம் வழங்கியும் வருகின்றனர். பல சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களின் வாழ்க்கைக் கேள்விக் குறியாக ஆகியுள்ளது. ஊதியமும் சரியாக வழங்கப்படுவதில்லை. அரசு இதற்கான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உடனடியாக முறையான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற செயல்பட வேண்டுகிறோம்.
11. சுயநிதிக் கல்லூரிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பணி வரன் முறை செய்ய கட்டளையிட வேண்டுகின்றோம்.
12. சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் பணிச்சூழல் மேம்பட சுயநிதிக் கல்லூரிகள் ஒழுங்காற்று சட்டம் ஒன்றை நிறைவேற்றக் கோருகின்றோம்.
13. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் லஞ்சம் பெற்றுத் தேவைக்கு அதிகமாக பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்களைத் தமிழ்நாட்டின் பிற கல்விக் கூடங்களில் திணிப்பதை நிறுத்தவேண்டும். இதனால் அந்தந்தப் பல்கலைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் புதியவர்களுக்கு மறுக்கப்படுகின்றது. பணியமர்த்த அண்ணாமலைப் பல்கலையில் லஞ்சம் வாங்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
14. தமிழ்நாட்டில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நேர்மையான, வெளிப்படையான முறையில் விரைவாக நிரப்ப வேண்டுகின்றோம்.
15. தற்காலிகப் பணியில் அமர்த்தப்படும் பல்லாயிரக்கணக்கான கெளரவ விரிவுரையாளர்கள் மிகவும் குறைந்த ஊதியத்தையே பெறும் அவல நிலை உள்ளது. பல்கலைக் கழக மானியக் குழு பரிந்துரைகளின் படி அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 50,000 ரூபாய் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
16. அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதில் பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும். அதை விடுத்து லஞ்சம் பெற்றுக் கொண்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை பின் கதவு வழியாக பணியிலமர்த்தும் முயற்சி தடுக்கப்பட வேண்டும்.