மதுரை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் கல்வி தொடர்பாக தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கு பயிற்சி மையங்களை அமைக்கக் கோரிய வழக்கில், பயிற்சி மையங்கள் அமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் NEET, JEE போன்ற தேர்வுகளுக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால் மருத்துவம் மற்றும் பொறியியலைத் தவிர்த்து பிற உயர்படிப்புகளைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு அது தொடர்பான வழிகாட்டல்களை வழங்க போதுமான வாய்ப்புகள் இல்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்த்து, மேலாண்மை, சட்டம், கல்வியியல், கணக்குத்தணிக்கை, விவசாயம், கவின்கலை என பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றிற்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பான விவரங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க தேவையான அமைப்புகளும் இல்லை. ஆகவே தமிழ்நாட்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்கல்வி தொடர்பான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்கு பயிற்சி மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும்.
மேலும் வெவ்வேறு துறைகள் சார்ந்த தேர்வுகள், உயர் கல்வி விவரங்கள், அதற்கான கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், துவக்க முகாம்கள் மற்றும் இணைய வழியிலான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பயிற்சி மையங்கள் அமைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.