மதுரை: சோழவந்தான் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 6.54 கோடி ரூபாய் செலவில் பயணிகள் வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மேம்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக ரயில் நிலைய அணுகுசாலை, வாகன காப்பகப்பகுதி ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் நடைமேடையின் வெளிப்பகுதியில் 400 மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்புதல், வயதானவர்கள், உடல் நலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இருப்பு பாதையில் உள்ள இரு நடைமேடைகளுக்கும் பாதுகாப்பாக செல்லவும், அங்கிருந்து வெளியே வரவும் மின் தூக்கிகள் அமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன.
தற்கால வளர்ச்சிக்கேற்ப ரயில் நிலைய கட்டிட முகப்பை மாற்றி அமைத்தல், ரயில் நிலைய அணுகு சாலை நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைத்தல், வெளி வளாக பகுதி மேம்பாடு, பாதசாரிகள் நடைபாதை, கூடுதல் கழிப்பறைகள், கழிப்பறைகளை பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றி அமைத்தல், பயணிகள் காத்திருக்கும் அறைகளை நவீனப்படுத்துதல், ரயில் நிலைய கட்டிடத்தை நவீனப்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டப் பணியாக மழைக்காலத்தில் பயணிகள் சிரமத்தை குறைக்கும் வகையில் நடைமேடையில் கூடுதல் மேற்கூரைகள் அமைத்தல், அவற்றின் மேல் 25 கிலோ வாட் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் ஒளி மின்னழுத்த தகடுகள் பொருத்துதல் போன்ற பணிகளும் நடைபெற இருக்கின்றன.