தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’நேரடி வகுப்புக்கு வர கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! - latest news

9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல தடை கோரப்பட்ட வழக்கில், மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகளின் விவரங்களைத் தெரிவித்தால், அப்பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு நேரடி வகுப்பு
மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

By

Published : Sep 15, 2021, 4:16 PM IST

Updated : Sep 15, 2021, 4:50 PM IST

மதுரை: திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வஹாபுதீன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.

3ஆவது அலை அச்சம்

18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. அதே நேரத்தில் கரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

தற்போது இருக்கும் குழந்தைகளே நாளைய தூண்களாக இருக்கக் கூடியவர்கள். சில பள்ளிகளில் மாணவர்களை கண்டிப்பாக நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டும் எனக் கூறுகின்றனர்.

அலட்சியம் காட்டும் பள்ளிகள், பெற்றோர்கள்

மேலும் சில பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவது இல்லை. சில பெற்றோர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் சரியாக மாணவர்கள் கற்பித்தல் இல்லை என்று கருதி நேரடி வகுப்புகளுக்கு அனுப்புகின்றனர்.

இதன் மூலம் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்வதால் சமூக இடைவேளையைப் பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

மேலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி செல்ல தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

கட்டாயப்படுத்தும் பள்ளிகள்...

இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ”பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்புகளுக்கு வர வேண்டும் எனக் கூறுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கட்டாயமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனக் கூறும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால், அந்தப் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தனர்.

மேலும் வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:நீட் மரணம் - மேலும் ஒரு மாணவி தற்கொலை

Last Updated : Sep 15, 2021, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details