தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

SPECIAL - மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் துயரம்.. பச்சிளம் பிஞ்சுகளின் மரணம் அதிகரிப்பு... காரணம் என்ன? - குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயங்கி வரும் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவில், அதிகளவில் குழந்தைகள் இறப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவல் சமூக ஆர்வலர்களையும் குழந்தைகள் செயற்பாட்டாளர்களையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவு
குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவு

By

Published : Apr 14, 2022, 10:57 PM IST

மதுரை:மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் பல்வேறு நோய்களுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021 அக்டோபர் 31 வரையிலான 46 மாதங்களில் 4 ஆயிரத்து 432 எண்ணிக்கையிலான அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. இதில் சிகிச்சைப் பலனளிக்காமல் 261 குழந்தைகள் உயிரிழந்து விட்டன.

இதே காலகட்டத்தில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் பத்து மடங்கு அதிகமாக 45 ஆயிரத்து 401 எண்ணிக்கையில் சிறு மற்றும் பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த எண்ணிக்கை மதுரையைவிட 40 ஆயிரத்து 969 அதிகமாகும். ஆனால், குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை ஒப்பிடுகையில் மதுரையைவிட சென்னையில் 137 இறப்புகள் என குறைவாகப் பதிவாகியுள்ளன. இது சமூக ஆர்வலர்களிடமும், குழந்தைகள் செயற்பாட்டாளர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசு மருத்துவமனைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதுடன், தகவல் அறியும் ஆர்வலராகத் திகழும் சமூக ஆர்வலர் வெரோனிக்கா மேரி கூறுகையில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவில் 86 வகையான உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மொத்தம் 227 உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மதுரையைக் காட்டிலும் 141 அறுவை சிகிச்சைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படுகின்றன. மதுரையை விட எழும்பூர் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவில் நான்கு மடங்கிற்கும் அதிகமான எண்ணிக்கையில் அதி நவீன அறுவை சிகிச்சை மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள் பயன்பாட்டில் உள்ளன. இதே காலகட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக 3 கோடியே 68 லட்சத்து 79 ஆயிரத்து 274 ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் 11 கோடியே 85 லட்சத்து 96 ஆயிரத்து 650 ரூபாய் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில், ஒரு பேராசிரியர், ஒரு இணை பேராசிரியர், நான்கு துணை பேராசிரியர்கள் என மொத்தமே ஆறு மருத்துவர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். ஆனால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில், 16 மருத்துவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். இரவு, பகல் என எந்நேரமும் செயல்பட்டு வருகின்றனர். 12க்கும் மேற்பட்ட மயக்கவியல் மருத்துவர்களும் உள்ளனர்.

மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைகள் மிகக்குறைவாகவும், தாமதமாகவும் நடைபெறுகின்றன. தென் மாவட்டங்களிலிருந்து குழந்தைகளுக்கான பல்வேறு அறுவை சிகிச்சைகளுக்காக அங்குள்ள மருத்துவர்களால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கே அனுப்பப்படுகின்றனர். இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள சிறிய கட்டடத்தில் குழந்தைகள் நலப் பிரிவு இயங்குவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

இதனைத் தவிர்க்க சென்னையைப் போன்றே மதுரையிலும் குழந்தைகள் நலப்பிரிவு தனிக்கட்டடத்தில் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதியளிக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே 100 கோடி ரூபாய் மதிப்பில் குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவை மேம்படுத்தும் திட்டம் வகுக்கப்பட்டும், இன்றுவரை அதனை செயல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளனர். இதுபோன்ற காரணங்களே இங்கு குழந்தைகள் இறப்பை அதிகரிக்கச் செய்வதற்கான காரணிகளாக உள்ளன” என்கிறார் வேதனையுடன்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் கூறும்போது, “மதுரையில் உள்ள குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவைக் காட்டிலும், மருத்துவர்கள், வார்டுகள், நவீன வசதிகள் என எவற்றை எடுத்துக் கொண்டாலும் மூன்று மடங்கு அதிக வசதிகளைக் கொண்டதாக எழும்பூர் மருத்துவமனை திகழ்கிறது. இன்னும் சொல்லப்போனால் இங்குள்ள இடவசதியை காட்டிலும் எழும்பூர் மருத்துவமனை பத்து மடங்கு கூடுதலாகும்.

குழந்தைகள் நல அறுவை சிகிச்சைப் பிரிவு குறித்து சமூக ஆர்வலரின் கருத்து

ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமன்றி வசதி படைத்தோரும்கூட தங்களது குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நுட்பமான அறுவை சிகிச்சைகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை நாடுகின்றனர். ஆகையால், குழந்தைகளின் இறப்பைத் தடுக்க குழந்தைகள் நலப் பிரிவை நவீனமயமாக்குவதுடன், மருத்துவர் பற்றாக்குறையை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது” என்கிறார்.

இதையும் படிங்க:'தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 2 புதிய இதய சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும்' - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details