மதுரை: 1974 மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி கச்சத்தீவு முழுமையாக இலங்கைக்கு அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது, மீனவர்களைக் கைது செய்து படகுகளைப் பறிமுதல் செய்வது ஆகிய செயல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த ஜுன் 21 அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை மீட்கவும், 1974 ஆம் ஆண்டு இந்தியா இலங்கை இடையே ஆன உடன்படிக்கைகளை ரத்து செய்து கச்சத்தீவை மீட்டெடுக்க கோரி சென்னை மீனவர்கள் நலன் சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் ராயன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1974ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை செய்து கொண்ட உடன்படிக்கையின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி பாரம்பரியமாக மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எந்த இடையூறும் செய்ய கூடாது” என உள்ளது.
1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என RTI தகவல் உள்ளது. இதுவரை தமிழக மீனவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்துள்ளனர். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு 111 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 19.06.2023ல் 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டனர். தற்போது 21.06.2023 ஆம் தேதி 22 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.