தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள தயார்'

வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். அதனை எதிர்கொள்ள பாரம்பரிய முறைகள் கைவசம் உள்ளன என்று கம்பீரமாகக் கூறுகின்றனர், மதுரை விவசாயிகள். அவர்களிடம் அப்படி என்னென்ன முறைகள் உள்ளெதென விரிவாக இச்செய்தி தொகுப்பில் காணலாம்...

வெட்டுக்கிளிகள்
வெட்டுக்கிளிகள்

By

Published : Jun 9, 2020, 9:03 PM IST

Updated : Jun 10, 2020, 5:19 PM IST

கரோனாவுக்கு அடுத்தப்படியாக பேசு பொருளாக இருப்பது வெட்டுக்கிளிகள்தான். பாலைவன வெட்டுக்கிளி என்று அறியப்படும் இந்த சிற்றுயிர் தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்க்கையிலும் விளையாடி விடுமோ என்ற அச்சம் உருவாகத் தொடங்கியிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து புறப்பட்டு ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை எல்லாம் பதம் பார்த்த இவ்வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்குள் நுழைந்து இருக்கின்றன. கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இன்னும் மீள முடியாத மக்களுக்கு வெட்டுக்கிளிகள் மற்றொரு பேரிடியாக இறங்கியுள்ளது.

இந்த வெட்டுக்கிளிகள் ஏறக்குறைய 40 ஆயிரம் மனிதர்கள் உண்ணக்கூடிய உணவை (6 மாதம்) நொடியில் காலி செய்துவிடுகின்றன. இது குறித்து மதுரை மாவட்ட விவசாயிகளிடம் கேட்கும் பொழுது, அவர்களின் பதில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வெட்டுக்கிளிகள்

மதுரை விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் கூறுகையில், ”நமது முன்னோர்கள் அந்த காலத்திலேயே இது போன்று வெட்டுக்கிளிகள் வந்ததாக கூறிய செவிவழிச் செய்திகள் உண்டு. இங்கு காலம் காலமாக சிறகிகள் என்று சொல்லப்படுகின்ற பறவைக்கூட்டம் நிலங்களில் இறங்கி பேரழிவை ஏற்படுத்திச்செல்லுகிறது. இந்த பறவைகள் இறங்குகின்ற நிலத்துக்கு சொந்தக்காரர் பெரும் நட்டத்தை சந்திப்பார்.

ஆனால் காலப்போக்கில் இவற்றையெல்லாம் விரட்டுவதற்கான தொழில்நுட்பங்களை நமது மக்கள் கற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆகையால் தற்போது வருகின்ற இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்து நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை,” என்றார்.

'வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள தயார்': மதுரை விவசாயிகள்

நற்பயிர் இயற்கை வேளாண்மை குழுவின் ஒருங்கிணைப்பாளர் போத்திராஜ் கூறுகையில், “தற்போது வெளிநாட்டில் இருந்து படையெடுத்துவரும் வெட்டுக்கிளிகளுக்கும், நம் நாட்டிலுள்ள வெட்டுக்கிளிகளுக்கும் வேறுபாடுகள் உண்டு. கிருஷ்ணகிரியில் வந்து இறங்கியுள்ள வெட்டுக்கிளிகள் இந்த மண்ணை சார்ந்தவை. ஆகையால் பயம் கொள்ள தேவையில்லை. வெட்டுக்கிளிகள் சிக்கல் என்பது மிக தற்காலிகமானதுதான். அது நமது நாட்டைச் சேர்ந்த ஒரு உயிரினம் இல்லை என்பதால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

அவற்றின் தாக்குதல் என்பது அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று மாதங்கள்தான் இருக்கும். இந்தியாவில் ஏறக்குறைய 3 ஆயிரம் வகையான வெட்டுக்கிளிகள் உண்டு. அவற்றில் நன்மை செய்யக்கூடிய வெட்டுக்கிளிகள் அதிகம் இருக்கின்றன. வெட்டுக்கிளிகளை மருந்து எடுத்துக் கொல்கின்றோம் என்ற பெயரில் இங்கு பாரம்பரியமாக இருக்கின்ற நன்மை செய்யும் சிற்றுயிர்களை அழித்துவிடக் கூடாது” என்றார்.

இது குறித்து மதுரை மாவட்ட பெரியார் பாசன சங்கத்தின் தலைவர் அருள் பிரகாசம் கூறுகையில், “தமிழ்நாடு விவசாயிகளுக்கு பல்வேறு வகையிலும் சிக்கல்கள் உருவாகிவருகின்றன. தண்ணீர் பற்றாக்குறை, பூச்சிகளின் தொல்லை, எதிர்பார்க்கும் நேரத்தில் கடன் உதவி கிடைக்காமலிருப்பது என இருக்கும் பாரத்திற்கு நடுவே, புதிதாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பும் இணைந்துள்ளது. அதனுடைய படையெடுப்பு குறித்து வரும் தகவல்கள் நாள்தோறும் நமக்கு காணக்கிடைக்கின்றன.

இந்த வெட்டுக்கிளிகளை பொறுத்தவரை, நமக்கு இவற்றை விரட்டியடிக்கும் முன் அனுபவம் நமக்கு இல்லை. கிராஸ் ஹோப்பர்ஸ் என்று சொல்லக்கூடிய வெட்டுக்கிளிகள் நமது மண் சார்ந்தவை, ஆனால் தற்போது படையெடுத்து வருபவை லோகஸ்ட் என்று சொல்லக்கூடிய பாலைவன வெட்டுக்கிளிகள். அதன் இயல்பு குறித்து நாம் சரியான முடிவுக்கு இன்னமும் வர இயலாத சூழலில் கரோனாவை போன்று இந்த வெட்டுக்கிளிகளையும் எதிர் கொண்டுதான் வாழ வேண்டும் போல் தெரிகிறது” என்றார்.

பிரிட்டிஷ் அரசின் மதுரை சத்திய என்ற குறிப்பு நூலில் கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மதுரையில் இதுபோன்று வெட்டுக்கிளி தாக்குதல்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற வெட்டுக்கிளிகளை விரட்டும் ஆற்றல் கொண்ட கரிச்சான் குருவி போன்ற பறவையினங்கள் நம்மிடையே அதிகம் இருப்பதால் இது குறித்து பெரிதும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்கின்றனர், மூத்த விவசாயிகள் சிலர்.

இந்த இந்தியாவை நோக்கி படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள் வேளாண் பொருளாதாரத்தை குறிவைத்து உருவாக்கப்பட்ட கிருமி போரா..? அல்லது இயற்கைக்கு மாறாக மனித இனம் நடத்திய தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் என்பதை இனி வரப்போகும் காலம் தான் உறுதி செய்யும்.

இதையும் படிங்க: வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பதிலாக தீவனமாக மாற்றலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில்

Last Updated : Jun 10, 2020, 5:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details