தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு, சென்னையில் உள்ள அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த பொருட்கள், பெயர்ப்பலகை ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு அம்மா உணவகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனிடையே, மதுரையில் அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படம் ஒருபுறமும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் மற்றொருபுறமும் ஒட்டப்பட்டன. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், அம்மா உணவகங்கள் அந்தப் பெயரிலேயே எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படும். அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது, இதுவே எனது முடிவு எனச் சட்டப்பேரவையில் (ஜன.5) பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், மீண்டும் மதுரையில் அம்மா உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு தற்போது வைக்கப்பட்டுள்ள அம்மா உணவகப் பலகையில் அவரது படம் இடம் பெறாதது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதேபோன்று ஜெயலலிதா தமிழ்நாட்டில் பசிப்பிணி இருக்கக்கூடாது என்று மாதம்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசியை வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்டனம் அதனைத் தொடர்ந்து ஏழை, எளியோருக்கு மலிவான விலையில் உணவினை வழங்கும் வகையில் கடந்த 19.02.2013அன்று அம்மா உணவகத்தைச் சென்னையில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 700 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இதன்மூலம் நாள்தோறும் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பசியாறி பயனடைந்தனர். குறிப்பாக கரோனா காலகட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு இந்தத் திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.
அம்மா உணவகங்கள் ஒருபோதும் மூடப்படாது - ஸ்டாலின் தற்போது அம்மா உணவகத் திட்டத்தினை தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறார்கள். மதுரையில் தற்போது 12 அம்மா உணவகங்கள் உள்ளன. மதுரையில் அம்மா உணவகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு தற்போது வைக்கப்பட்டுள்ள, அம்மா உணவகப் பலகையில் அவரது படம் இடம் பெறாதது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் அதில் எந்த மாற்றம் இல்லை என்று அறிவித்திருந்தார். ஆனால், முதலமைச்சரின் அறிவிப்பிற்கு எதிராக இங்கே மதுரை மாநகராட்சியில் அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றி மாற்றம் செய்திருப்பது, முதலமைச்சர் உத்தரவிற்கு மதிப்பு கொடுக்காமல், அதனைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம். மதுரை மாநகராட்சியின் செயல் மிகுந்த மனவேதனையை மதுரை மக்களிடத்தில் ஏற்படுத்தியிருப்பதோடு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம் சொல்வது ஒன்று; செய்வது ஒன்றா என்று இந்த செயலைப் பார்த்து மதுரை மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள். அம்மா பேரவை சார்பாக, மதுரை மாநகராட்சி இந்தச் செயலுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திடுக - முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்