‘சித்திரை திருவிழா நடைபெற வாய்ப்பில்லை’ - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - சித்திரை திருவிழா
மதுரை: கரோனா வைரஸ் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இந்தாண்டு சித்திரை திருவிழா நடைபெற வாய்ப்பில்லை என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
![‘சித்திரை திருவிழா நடைபெற வாய்ப்பில்லை’ - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6827271-thumbnail-3x2-mdurb.jpg)
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை முருகன் சபை சார்பில் கரோனா பாதிப்படைந்தவர்களுக்கு வழங்க உள்ள உணவுகள் தயார் செய்யும் பணியினை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஊரடங்கு அமலில் இருக்கும் வரை மக்கள் கூடும் அனைத்து மத விழாக்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் எந்த விழாவாக இருந்தாலும் நடைபெறாது.
மனித உயிர் குறித்த சவால் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெறாது. அழகர் பெருமான் நமக்கெல்லாம் அருள் புரிந்து நம்மை காப்பாற்றுவார்.
ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்ட பின்னர் விழா நடத்துவது குறித்து ஆலோசனைக்குப் பிறகு முடிவுகள் தெரிவிக்கப்படும். ஊரடங்கின்போது மக்கள் கூடும் எந்த நிகழ்வும் தடை செய்யப்பட்ட வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு” என்றார்.