மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியில் கலந்துகொண்டு அதிமுக சார்பில் முதலமைச்சர் மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சிறந்த காளைக்கு காரும் வழங்குவார்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. போட்டியை மாவட்ட நிர்வாகத்தோடு காவல்துறை, வருவாய், கால்நடை, சுகாதாரதுறையும் இணைந்து செயல்படும்.
கரோனா பரவல் தடுப்பு பணியாக பார்வையாளர்கள் இருக்கைகள் தனிமனித இடைவெளி விட்டு அமைக்க ஏற்பாடு செய்யப்படும். போட்டி முழுவதிலும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படும். போட்டிகள் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை மட்டுமே நடைபெறும்.
அலங்காநல்லூரில் 700 முதல் 800 காளைகள் வரை பங்கேற்க வாய்ப்புள்ளது. பார்வையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே போட்டிகளை பார்வையிட அனுமதிக்கப்படும். கனமழை பெய்துவருவதால் போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகளை பாதுகாப்புடன் விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜல்லிகட்டு போட்டிகளில் வெளிநாட்டு பயணிகள் வருவது குறித்து விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்யும். வீரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பாதுகாப்பு கருதியும் மாலை 4 மணிவரை நடைபெறும்.
மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்கும் போது கட்டாயமாக முக கவனம் அணிய வேண்டும், அதற்காக பயிற்சிகளை சுகாதாரதுறை வழங்கும். ஜல்லிகட்டு போட்டிகளில் வெற்றிபெறும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
தொடர்மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய விலை தர மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொள்ளும். மாசி, ஐப்பசி பிறந்தாலும் ஸ்டாலினுக்கு வழி பிறக்காது. பொங்கல் பரிசு தொகுப்பான 2,500 ரூபாய் வழங்கும் போது அதனை நேரில் பார்த்தோம். அம்மா அரசு உருவாக வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.