மதுரை:முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமணம் குறித்து விமர்சித்து பேசிய பேச்சுக்கு அமைச்சர் மூர்த்தி கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அமைச்சர் மூர்த்தி நடத்திய ஆடம்பர திருமணத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது. நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள் மூன்று கோடி என்று.
மக்களுக்கு திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. அம்மா உணவகத்திற்கு நிதி பற்றாக்குறை என்று கூறப்படுகிறது. மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து கேட்டால் நிதி பற்றாகுறை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. மதுரையில் எந்த அமைச்சர் குடும்பத்திலும் இதுபோன்று திருமணம் நடக்கவில்லை, இதில் எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த தவறும் இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கனிமவளத் துறை வணிகவரித்துறையில் நடைபெற்றவை குறித்து புள்ளி விவரங்களோடு விவாதிக்க நான் தயார். கடந்த ஒன்றறை ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா? எடப்பாடியிடம் உதவி கேட்காதவர்கள் யாரும் கிடையாது, அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.