பிரதமராக மோடியையும் முதல்வராக எடப்பாடியையும் தமிழக மக்கள் விரும்புகிறார்கள் - ஆர் பி உதயகுமார் பேட்டி! மதுரை:மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாலையில் சிறப்பு வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் 100 மூடை அரிசி மூட்டைகளை வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் 1920 முதல் 2021 வரை எண்ணற்ற முதல்வர்கள் ஆட்சி செய்து உள்ளனர்.
இதில் எம்ஜிஆரின் சத்துணவு திட்டம், ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டம், மடிக்கணினி திட்டம், கோயில்கள்தோறும் அன்னதானத் திட்டம், அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் குடிமராமத்து திட்டம், நதி நீர் இணைப்புத் திட்டம், நீர்நிலை மேம்பாடு திட்டம் இவையெல்லாம் வரலாறு படைத்து வருகிறது” என கூறினார்.
மேலும் அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், இது போன்ற அங்கீகாரம் இந்தியா கூட்டணியில் ஸ்டாலினுக்கு கிடைக்கவில்லை. இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் கூட்டணி சேரமாட்டோம் என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தில் இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கு கருத்து வேறுபாடு உள்ளது. முரண்பாடு எல்லோரிடத்திலும் உள்ளது.
இதையும் படிங்க: கோடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட்! சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் மகிழ்ச்சி!
எடப்பாடி டெல்லி சென்றபோது மன உறுதியுடன் பேட்டி அளித்தார். அதில், மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். ஏனென்றால், கடந்த 9 ஆண்டு காலமாக வரலாறு காணாத வளர்ச்சியை நாடு கண்டுள்ளது என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமராக மோடியும், தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும் வர வேண்டும் என எதிர்பார்த்து வருகிறார்கள். திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். திமுகவை அகற்ற வேண்டும்.
மதுரைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை வெளியிடுவாரா? அதேபோல் ஒற்றைச் செங்கலை காட்டினாரே, அதை எங்கே வைத்தார் என்று சொல்வாரா? வரலாறு காணாத சொத்து வரி உயர்ந்து விட்டது, பால்விலை உயர்ந்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த முடியாமல் சனாதானத்தைப் பற்றி பேசி திசை திருப்புகிறார்கள்.
வரலாறு இல்லாதவர்கள் வரலாற்றைப் பற்றி பேசுவது சர்ச்சையாக உள்ளது. தேசிய வரலாறு தெரியாதவர்கள், படிக்காதவர்கள் அதை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவில், அவரின் கோட்பாடுகளை எல்லாம் எடப்பாடி நிதானமாக, பொறுமையாக, சகிப்புத் தன்மையுடன் கடைபிடித்து வருகிறார்” என கூறினார்.
இதையும் படிங்க: "திமுக அரசுக்கு விநாயகர் தண்டனை கொடுப்பார்" - இந்து முன்னணி கண்டனம்!