மதுரை:மேகதாது அணையை 69 டிஎம்சி கொள்ளளவு கொண்டு கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என ஆர்.பி.உதயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார். மேகதாது அணை கட்டினால், தமிழகம் பாலைவனம் ஆகுமெனவும், தமிழகத்தின் காவிரி நீர் ஜீவாதார உரிமை பறிபோவதைக் கண்டு மு.க.ஸ்டாலின் மௌனம் காப்பதாகவும், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு எட்டப்பாடாத நிலையில், விளம்பரத்தின் மூலம் திமுக ஆட்சி செய்தாகவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.எஸ்.காலனி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மகாளாய அமாவாசையை முன்னிட்டு நடந்த பார்வையற்றோருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், 'திமுக அரசு கையாளாகாத படி, அனைத்து திட்டங்களிலும் குளறுபடியின் மொத்த வடிவமாக உள்ளது.
520 தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு அதை 100% நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு ஸ்டாலின் பச்சைப்பொய் பேசுகிறார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பாதிப்படைந்த மக்கள் போராடி வருகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, 520 தேர்தல் வாக்குறுதிகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பற்றி கூறியுள்ளார்கள். அதில், 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்று கூறிவிட்டு, ஐந்தரை லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறினார்கள். இதுவரை 11 ஆயிரம் மேற்பட்ட வேலைவாய்ப்பு தான் வழங்கப்பட்டுள்ளது' என்று குற்றம்சாட்டினார்.
பறிபோகும் காவிரிநீர் ஜீவாதார உரிமை; மௌனம் காக்கும் மு.க.ஸ்டாலின்:'காவிரியில் ஜீவாதார உரிமை பறிபோகிறது; மேகதாது அணை கட்டிவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டு விடும். கிருஷ்ணசாகர், கபினி, ஹேமாவதி ஆகிய அணைகளில் 15 டிஎம்சி, 45 டிஎம்சி, 35 டிஎம்சி கொள்ளளவு உள்ளது. ஆனால், மேகதாது அணையை 69 டிஎம்சி கொள்ளளவு கொண்டு கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டதற்கு, இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
தமிழகம் பாலைவனமாகும்:சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியபோது மத்திய அரசை வலியுறுத்துவதோடு, கர்நாடக அரசையும் வலியுறுத்தி கண்டிக்க வேண்டும் என எடப்பாடி கே.பழனிசாமி கேள்விகளை முன்வைத்தார். ஆனால், முதலமைச்சர் மழுப்பலாக பதில் கூறி திசை திருப்பினார். மாநில உறவுகள் முக்கியம்; உரிமை என்பது அதைவிட முக்கியம். உரிமைகள் பறிபோனால், தமிழகம் பாலைவனமாக ஆகிவிடும். டெல்டா நெற்களஞ்சியத்தை காவு கொடுத்துவிட்டு எதைக் காப்பாற்றப் போகிறோம்?