மதுரை:அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு சார்பில் அம்மா கோயிலில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார்.
இதில் முன்னாள் அமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது பேசிய அவர், “திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கருத்து சுதந்திரத்திற்கு பாடம் எடுத்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் அதை மறந்துவிட்டு கருத்து சுதந்திரத்தை நசுக்குகின்றனர்.
திமுகவின் கபடநாடகம்
சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை சுட்டிக்காட்டிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவுவின் கருத்துக்கு தடை செய்து, அடக்குமுறையை ஏவுகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். தேசிய தேர்வு முகமை, எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்றவைகளுக்கு தேசிய தகுதி மற்றும் நீட் நுழைவுத் தேர்வுகளை செப்டம்பர் 5ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூற போகிறார்.
மௌனம் காக்கும் திமுக
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏழு பேர் விடுதலை குறித்து பல விமர்சனங்களை முன்வைத்தது. அதிமுக அடிமை அரசு; உரிமை குரல் எழுப்ப முடியாது என்றது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஏழுபேர் விடுதலை உறுதி என்றார்கள். ஆனால் தற்போது பரோலில் விட்டுவிட்டு, எழுவர் விடுதலையில் மௌனம் காப்பது ஏன்?
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டபோது ஜெயலலிதா சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்வை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
முதியோர் உதவித்தொகை
இன்றைக்கு 435 ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் முதியோர் உதவித்தொகை 37 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இதற்காக 4,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது ஆனால் அதற்கு முன் நடைபெற்ற திமுக ஆட்சியில் 12 லட்சம் பேருக்குதான் வழங்கப்பட்டது.
இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஆகும். இப்பகுதியில் 58 கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து மூன்று முறை சோதனை செய்யப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை