ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையிலிருக்கும் ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிசந்திரன் உள்ளார். ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதனடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளது. கரோனா காலத்தில் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்கக் கோரி மனு அனுப்பினேன். அதற்கு மத்திய அரசின் சட்டப்பிரிவின் கீழ் எனது மகன் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், இதனைக் காரணம் காட்டி ஏற்கனவே தமிழ்நாடு அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையிலிருக்கும் எனது மகன் ரவிச்சந்திரனுக்கு இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.