மதுரை:இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 46 ஆயிரத்து 20 திருக்கோயில்கள் உள்ளன. இந்தத் திருக்கோயில்களில் கடந்த 11 மாதங்களில் இதுவரை 232 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்யப்பட்ட கள ஆய்வின் மூலம் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரத்து 612 சுருணை ஏடுகளும், 348 இலக்கியச் சுவடிக் கட்டுகளும், 33 ஆயிரம் ஏடுகளும், 5 தாள் சுவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் கள ஆய்வு செய்து முடிக்கும்போது, இன்னும் மிக அதிகமான சுவடிகள் கண்டறிய வாய்ப்பு உள்ளது என தெரிய வருகிறது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் அரிய ஓலைச்சுவடிகளைத் தேடித் திரட்டி, பராமரித்து, அட்டவணைப்படுத்தி, மின்படியாக்கம் செய்து பாதுகாக்கும் பணியோடு, அதனை நூலாக்கும் பணியிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காகத் திருக்கோயில்கள், மடங்களின் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு, நூலாக்கத் திட்டப் பணி என்னும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா இத்திட்டப் பணியின் முதன்மையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முனைவர் ஜெ.சசிகுமார் இத்திட்டப் பணியினைக் கண்காணித்து வருகிறார்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் 12 பேர் கொண்ட சுவடிக் குழுவினர் இத்திட்டப் பணியில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சுவடித் திட்டப் பணிக் குழுவினர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் (Tirunelveli Nellaiappar Temple) கள ஆய்வு செய்துள்ளனர். கள ஆய்வின்போது சில அரிய ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்துள்ளனர். எனவே, அது குறித்து திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளரும், சுவடியியல் துறை பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன் கூறுகையில், “இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, திருக்கோயில்களில் உள்ள அரிய ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் சுவடித் திட்டக் குழுவினராகிய நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
பல மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களிலும் தொடர்ந்து கள ஆய்வின் மூலம் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்து அட்டவணைப்படுத்தி வருகிறோம். மேலும், சுவடிகளைப் பராமரித்துப் பாதுகாப்பதோடு நூலாக்கமும் செய்து வருகிறோம். இந்த நிலையில், எனது தலைமையில் சுவடியியலாளர்கள் ரா.சண்முகம், க.சந்தியா, நா.நீலகண்டன், மா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் அரிய சுவடிகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்தோம். அவ்வாறு தேடியபோது கோயில் நிர்வாகம் பாதுகாத்து வந்த 10 செப்புப் பட்டயங்களைக் கண்டறிந்தோம்.