மதுரை:தமிழர்களின் உணவில் மிளகாய்க்கு மிக முக்கியப்பங்கு உண்டு. மிளகுக்கு மாற்றாக இந்தப் பயிர் இங்கு வந்ததால் அந்தப் பெயரின் அடிப்படையிலேயே மிளகாய் என அழைக்கப்பட்டது. மண் சார்ந்த பயிர் அல்ல. ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த மிளகாய். அதற்கு முன்பு வரை சமையலுக்கு மிளகுதான் பயன்படுத்தப்பட்டது. மிளகு பாரம்பரியமான மண் சார்ந்த பயிர்.
பண்டைய தமிழ்நாட்டின் துறைமுகங்களிலிருந்து ரோம் வரை கூட கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியடு பெயரும், வளங்கெழு முசிறி' என பொன்னுக்கு மாற்றாக மிளகை யவனர்கள் பெற்றுச் சென்றதை அகநானூறு பாடியுள்ளது. ஆனால் மிளகாய், வெளிநாட்டுப் பயிர் என்றாலும்கூட கடந்த 400 ஆண்டுகளாக தமிழர்களின் உணவில் முக்கியப் பங்காற்றுகிறது. சம்பா வத்தல் என்றழைக்கப்படுகின்ற நீள வத்தல், முண்டு வத்தல் என்றழைக்கப்படும் குண்டு வத்தல் என மிளகாய் இரண்டு வகையாக இங்கு விளைவிக்கப்படுகிறது.
இதில், முண்டு வத்தல், ராமநாதபுரம் மண்ணுக்கே உரிய தனிச்சிறப்பு மிக்க பயிராகும். கரிசல் மண்ணில் வளரும் முண்டு வத்தல் காரம் மிகுந்ததாகவும், சுவை கூடியதாகவும் உள்ளது. ஒரு கிலோ சம்பா வத்தலில் உள்ள காரம், அரை கிலோ முண்டு வத்தலில் கிடைக்கும். அதனால் நீள வத்தலைக் காட்டிலும் முண்டு வத்தல் சற்று விலை அதிகமும்கூட. சம்பா வத்தலைப் போன்று இதனை அரைத்துப் பொடி செய்து பயன்படுத்தாமல், சில பகுதிகளில் நேரடியாக சாம்பார் உள்ளிட்ட குழம்பில் காயாகவே பயன்படுத்துகின்றனர்.
இம்மிளகாய் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பயிர் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 19 ஆயிரத்து 238 ஹெக்டேர் பரப்பளவு மிளகாய் உற்பத்திக்கு உரியவையாக இருந்தாலும் 639 ஹெக்டேர்தான் உற்பத்தித்திறன் மிகுந்ததாய் உள்ளது. 12 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ராமநாதபுரம் மட்டுமன்றி, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி பகுதிகளிலும் மிளகாய் உற்பத்தி கணிசமாக நடைபெற்று வருகிறது.
வேளாண் அறிஞர் பாமயன் கூறுகையில், “இது மண் சார்ந்த பயிரல்ல என்றாலும், கடந்த 400 ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தில் இடம் பெற்றுள்ளது. கரிசல் மண்ணில் விளையும் முண்டு வத்தல் உற்பத்தியில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ராமநாதபுரம் மண்ணில் விளையும் முண்டு வத்தல் தனித்தன்மை வாய்ந்தது” என்கிறார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி காளிமுத்து கூறுகையில், “முண்டு வத்தலின் காரமும், சிவப்பு வண்ணமும்தான் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற முக்கியக் காரணம். மேலும், இந்தப் பயிருக்கான விதையை இந்த விவசாயிகளே எடுத்து வைத்து மிகச் சிறப்பான முறையில் பாதுகாக்கின்றனர். இந்தியாவின் மிளகாய் உற்பத்தியில் 10 விழுக்காடு ராமநாதபுரம் விவசாயிகளின் பங்களிப்பு உள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய்க்கு பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடு கூட இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை. புவி சார் குறியீடு பெற்றிருப்பதன் மூலம் நிதி ஒதுக்கீடு அதிகமாகும் என நம்புகிறேன்” என்கிறார்.