ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களின் மனதில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக நீடித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி ரஜினிகாந்த் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஆலோசனைக் கூட்டம் முடிந்து மூன்றே நாள்களில், வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (டிசம்பர் 3) அவர் அறிவித்து தனது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், ரஜினியின் இந்த அறிவிப்பைக் கொண்டாடும்விதமாக அவரது ரசிகர்கள், '#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல' என்ற வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினியின் அரசியல் வருகையால் தமிழ்நாட்டில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து ஈடிவி பாரத்துக்காக மதுரையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
ரஜினியின் அரசியல் வருகையும், பொதுமக்களின் கருத்தும் அப்போது கருத்து தெரிவித்த இரும்புக் கடையில் பணியாற்றும் நாகேந்திரன், ”நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் கனிந்திருந்த காலத்தில் எல்லாம் அதனைத் தவறவிட்டுவிட்டு தற்போது அரசியலில் நுழைகின்ற முடிவை எடுத்திருப்பது மிகத் தவறானது. மேலும் சாமானிய மக்களிடம் இவரது வரவு எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது எனது கருத்து” என்றும் கூறினார்.
விற்பனைத் துறையில் மேலாளராகப் பணியாற்றும் இசக்கியப்பன் இதுகுறித்து கூறுகையில், ”தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் தற்போதைய சூழலில் மிக அவசியம் தான். ஆனால் அதனை ரஜினியால் தான் தர முடியும் என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ரஜினி எடுத்த இந்த முடிவு என்பது அவராக எடுத்தது அல்ல, அவரைச் சுற்றியுள்ள புற தூண்டுதல்களும் இதற்குக் காரணம். தற்போதைய ரஜினியின் அரசியல் அறிவு வாக்களிப்பதற்காக மட்டும்தான் பயன்படும். வெற்றி பெறுவதற்கான சூழலை நிச்சயம் உருவாக்காது” என்றார்.